







உண்மைக் கதையை எதார்த்தமாக எல்லோருடைய இதயத்திலும் தைக்கிற மாதிரி சொல்லி இருக்கிறார்கள்.
அதற்கு அயலி என்ற பெண் தெய்வத்தை துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். அந்த அவலத்தை கல்வி மூலமாக உடைத்தெறிக்க முயற்சிக்கிறாள் அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தமிழ்ச்செல்வி. அவளின் முயற்சிகள் என்னவானது என்பதை எட்டு எபிசோட்களில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்
அறிவு தான் கடவுள். அதன் வழி நடப்பதே நன்மை பயக்கும் என்ற கருத்தை உள்வாங்கி தமிழ்ச்செல்வியாக தலைமைப் பாத்திரம் ஏற்றிருக்கிறார் அபி. 9-ஆம் வகுப்பு மாணவியாக இருந்து ஊருக்கு அறிவுச்சுடர் ஏற்றும் கேரக்டரில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அபி. சிறு சிறு ரியாக்ஷன்களிலும் அசத்தியுள்ளார். அவரது அம்மா கேரக்டரில் நடித்துள்ள அனுமோல் மிகச்சிறந்த தேர்வு. தன் இயலாமையை வெளிக்கொண்டு வரும் காட்சிகளில் நம்மைக் கலங்கடிக்கிறார். அபியின் தந்தை கேரக்டரில் வரும் அருவி மதன் பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். சிங்கம்புலி கேரக்டர் போலவே தர்மராசன் கேரக்டரும் ஓரளவு சிரிப்புத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும் தர்மராஜனை வைத்து செய்யும் உருவக கேலியை தவிர்த்திருக்கலாம். வில்லனாக வரும் லிங்கா முதல் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்திருப்பவர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்
ரேவாவின் இசையில் அயலி இன்னும் கம்பீரம் காட்டுகிறாள். அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் ரசனை. சிறிய பின்னணிகள் கொண்ட நிலப்பரப்பை கூட மிக அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். கணேஷின் எடிட்டிங்கும் திரைக்கதைக்கு உதவியுள்ளது
ஒரே இடம் ஒரே பிரச்சனை அதற்கான ஒரே தீர்வு என ஒரு சிறிய வட்டம் தான் கதையும் திரைக்கதையும் என்பதால் கூறியது கூறல் போன்ற தொனி சீரிஸ் பார்க்கும் போது ஏற்படுகிறது. இருந்தாலும் கனமான கதைகளம் என்பதால் அதனை இயல்பாக நாம் மறந்துவிடுகிறோம்
Zee5 OTT வெளியிடும் இத்தொடரை பெருமையாக பேர் சொல்லும்படி தயாரித்துள்ளார் எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் புரொடக்ஷன் கம்பெனி நிறுவனர் குஷ்மாவதி. ஒரு தயாரிப்பாளராக அவரின் கதைத் தேர்வு சல்யூட் அடிக்க வைக்கிறது
ஒவ்வொரு எபிசோட்களிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் வசனங்கள். மிக அருமையாக அமைந்துள்ளது. சரியான கருத்துக்கு சரியான எழுத்தும் வாய்த்திருப்பதால் அயலி அசரடிக்கிறாள்.
அடூர் கோபாலகிருஷ்ணன், பாலுமகேந்திரா போன்றோர் கையாண்ட இந்த மாதிரி வாழ்வியல் கதையை சிறிய திரையில் சொல்ல முயற்சித்து அழுத்தமான வசனங்களால் அழகாக இயக்கிய இந்த குழுவினரை பாராட்டலாம்.