







இந்தியா அளவில் மக்களை திரும்பி பார்க்க வைத்தவர்தான் தேசிய விருது நாயகன் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு என்பது அதிகம். அந்த வகையில் வாத்தி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் எனலாம். குறிப்பாக தனுஷ் படங்களில் சமீபமாக வெளிவந்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்த படம்தான் கர்ணன். தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஒண்டெர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஒண்டெர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து, தங்களது புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளன. கர்ணன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைகிறார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது.குறிப்பாக விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஒண்டெர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
நடிகர் தனுஷின் திரை பயணத்தில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகவுள்ளது. மேலும் தனுஷுன் ஒண்டெர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில், இறங்குவது குறிப்பிடத்தக்கது. , ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஒண்டெர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், பல்வேறு மொழி திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.