







தமிழ் திரைப்பட துறையில் வெற்றிகரமான தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த். குறிப்பாக YNOT ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிபில் ‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ போன்ற பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தற்போது டெஸ்ட் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஆர்.மாதவன் பேசுகையில்,
சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய இவர், இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுப்பதை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது.குறிப்பாக ‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு YNOT உடனான எனது மூன்றாவது படமான ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
சித்தார்த் பேசுகையில்,
ஒரு சிறந்த தயாரிப்பாளர் மற்றும் அன்பான நண்பராக சஷியை எனக்கு தெரியும். அவரை இயக்குநராக பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளேன். இந்த ‘டெஸ்டில்’ அவர் சிறப்பாக தேர்ச்சி பெறுவார் என நான் நம்புகிறேன் எனவும் இப்படத்தில் எனது பங்களிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” என்றார்.
நயன்தாரா பேசுகையில்,
சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகுகின்ற திரைப்படங்கள் சிறந்த தரமான கதைகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றாக விளங்கின்றன. சஷிகாந்தின் அசாத்தியமான திறமையை பற்றி பல நண்பர்களிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன் எனவும் அவருடைய தனித்துவமான பார்வையும், கதை சொல்லும் திறமையும் இந்தப் படத்தை அமோக வெற்றியடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.முக்கியமாக YNOT தயாரிப்பில் சஷிகாந்தின் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படமான ‘டெஸ்ட்’டில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், சிறப்பான கதாபாத்திரத்தில் இப்படத்தில நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்
தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரா பேசுகையில்,
பத்தாண்டுகளுக்கும் மேலாக சஷியுடன் பணியாற்றியுள்ள நான் சரியான கதைகளைக் கண்டறிவதில் அவருக்கு இருக்கும் திறமையையும், சிறு விவரங்கள் மீதும் அவருக்குள்ள பேரார்வத்தையும் நன்றாக அறிவேன். மிகவும் ஈர்க்கக்கூடிய கதையம்சம் கொண்ட ‘டெஸ்ட்’, சஷியின் அசாத்தியமான கதை சொல்லும் திறமை, சிறந்த வடிவமைப்பு உணர்வு, மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் புதிய கண்ணோட்டம் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் எனவும் சஷி இயக்குநராக அறிமுகமாகும் படத்தை தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. YNOTன் முதல் தயாரிப்பின் போது இருந்ததைப் போலவே இப்போதும் மிகுந்த உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.
எஸ்.சஷிகாந்த் பேசுகையில்,
ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து தயாரிப்பாளராக மாறியதால், கதை சொல்லும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். இந்தத் துறையில் உள்ள திறமையான திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றும் அதிர்ஷ்டம் பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது. இப்போது, ஒரு இயக்குநராக எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, எனது கண்ணோட்டத்தை திரையில் கொண்டு வரவும், பார்வையாளர்களை சென்றடையும் கதைகளை கூறவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அசாதாரண திறமை கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளனர். அவர்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு தயாரிப்பாளராக என் மீது இத்தனை ஆண்டுகளாக திரையுலகம், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனது புதிய முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். மனித உணர்வுகளின் உன்னதத்தை விவரிக்கவுள்ள ‘டெஸ்ட்’, விளையாட்டுத்திறன், தோழமை உணர்ச்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை மையப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கதையாகும். பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர்த்தி அவர்களின் இதயங்களை தொடும் படமாக இது இருக்கும். சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடைபெறும். 2024 கோடை காலத்தில் உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும்.