Take a fresh look at your lifestyle.

ஒரு நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம்-பாடலாசிரியர் வைரமுத்து பேட்டி..

45

*ஒரு நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம். நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன் அவர் பெயரை காலம் சொல்லும். கலை சொல்லும் என்று நம்புகிறேன்…

பாடலாசிரியர் வைரமுத்து பேட்டி..

*தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தியின் குடும்பத்துக்காக ஒரு படம் பண்ணி கொடுக்க வேண்டும். நிச்சயமாக அஜித் சார் ஏதாவது பண்ண வேண்டும்….

தயாரிப்பாளர் சௌந்தர் கோரிக்கை…

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் மற்றும் சிலம்பரசனை வைத்து நிறைய வெற்றி படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தி.
இவர் கடந்த 8 மாத காலமாக புற்று நோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இயற்கை எய்தினார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை கே. கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட எஸ்.எஸ் சக்ரவர்த்தி உடலுக்கு, இயக்குநர்கள் துரை, சரவணன், சுப்பிரமணியம் சிவா, ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் கமீலா நாசர், பாடலாசிரியர் வைரமுத்து , தயாரிப்பாளர்கள் சரவண சுப்பையா, சௌந்தர், பி.டி செல்வக்குமார், உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து பேசியதாவது,
ஒரு நல்ல தயாரிப்பாளரை கலை உலகம் இழந்துவிட்டது. ஒரு நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன். கலை உலகில் படம் தயாரிப்பது என்பது அவ்வளவு எளிய பணி அல்ல. நாங்கள் எழுத வந்த காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது என்பது அபூர்வம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தன்னுடைய தோல்விகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையை முன்வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார்.

எனக்கு அவர் மீது ஓர் அன்பு என்ன தெரியுமா, அவர் எடுத்த படங்களில் பெரும்பாலான படங்கள் நானே எழுத வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவ்வளவு தமிழ் காதல் அவருக்கு நடிகர் அஜித்தை வைத்து வாலி, முகவரி, சிட்டிசன், வரலாறு, வில்லன், ஆஞ்சநேயா உட்பட்ட ஏழு படங்களை தயாரித்தார்.

அந்த ஏழு படங்களுக்கும் நானே பாட்டு எழுத வேண்டும் என்று விரும்பியதால் எழுதிக் கொடுத்தேன். அந்த காலத்தில் நட்பு தழைத்திருந்தது. ஒரு தயாரிப்பாளர் ஒரு பாடலாசிரியனை வேலை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய் விடுவது மட்டும் ஒரு வேலை அல்ல எழுதிய வரிகளை ரசிப்பதும் அதை பாராட்டுவதும் கொண்டாடுவதும் அதை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுவதும் ஒரு தயாரிப்பாளருக்கு கைவந்த கலை அல்ல அந்தக் கலை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு கைவந்திருந்தது. ஒரு நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன் அவர் பெயரை காலம் சொல்லும். கலை சொல்லும் என்று நம்புகிறேன். அவர் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் இரங்கல் நண்பர்களுக்கு என் ஆறுதல் கலை உலகத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல் என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவண சுப்பையா,
அவர் என்னுடன் சேர்த்து 10 இயக்குனர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். முகவரி திரைப்படத்தில் துரைக்கும் ரெட் திரைப்படத்தில் சிங்கம் புலிக்கும் சிட்டிசன் திரைப்படத்தில் எனக்கும் வாழ்க்கை கொடுத்திருக்கிறார்.
அந்த 10 இயக்குனர்களும் இன்று நன்றாக இருக்கிறார்கள். ஒரு படம் முடிந்து விட்டது என்று முடிந்து விடாமல் நான் அவர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த நிகழ்வில் நான் இருப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது எனவும் கூறினார்.

தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்,
ஒரு நடிகரை உருவாக்குவது சாதாரண காரியம் இல்லை. நான் விஜய்யுடன் இருக்கும்பொழுது அவர் அஜித்துடன் இருந்தார். நிறைய கஷ்டங்களை சந்தித்தோம். என்னால் அவருடைய சந்தோஷத்தில் பங்கு கொள்ள முடியவில்லை ஆனால் அவரது கஷ்டத்தில் நான் உடன் இருந்தேன்.

ஆதலால் என்னை மறக்க மாட்டேன் தம்பி என்று சொன்னார். நடிகர் விஜயகாந்திற்கு எப்படி ஒரு இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பாளாரோ அதேபோன்று நடிகர் அஜித்திற்கு எஸ்.எஸ்.சக்கரவர்த்தி ஆவார். நான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும் என் மனது முழுதும் இவரது மறைவில் தான் இருக்கிறது. அவரது மறைவால் கண்ணீர் வருகிறது. என்னால் முடிந்த உதவிகளை அவரது குடும்பத்திற்கு செய்வேன் என தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கான நிச்சயமாக அஜித் சார் ஏதாவது பண்ணி தர வேண்டும் ஒரு படம் பண்ணி தர வேண்டும். அவர் நல்ல நண்பர். நல்ல மனிதர். நிச்சயமாக செய்வார் என்று ராஜாவின் பார்வையிலே படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர் அஜித்துக்கு கோரிக்கை விடுத்தார்.

இயக்குனர் சுப்பிரமணியன் சிவா,
தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. ராசியில் துவங்கி வாலு வரை நிறைய படங்களை பண்ணி இருக்கிறார். என்னை பொறுத்தவரை, எல்லாரும் சினிமாவை அறிவில் வைத்தும், உயிரில் வைத்தும் பார்த்த போது சினிமாவை ஆன்மாவில் வைத்து பார்த்தவர்.

முகவரி படத்தை உதயம் திரையரங்கில் நானும் அவரும் பார்க்கும் போது , சிவா சினிமா என் கையில் உள்ளது என்று சொன்னதாகவும், சினிமாவை அந்த அளவிற்கு நேசித்தவர்.

புதிய நடிகர்கள், இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். அமர்க்களம் படத்தை பார்த்து விட்டு பாராட்டியதையும், நல்ல சினிமாவை எப்போதும் கொண்டாடுவர் எனவும், இசையை கேட்டு கொண்டே இரு என்று எப்போதும் என்னிடம் சொல்லி கொண்டே இருப்பார் என்றும், அவர் முடியாமல் இருக்கும் போது பார்க்க முடியவில்லை. தற்போது அவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.