







மன நிறைவை கொடுக்கும் ‘குட் நைட்’
இயக்குநர் விநாயக் இயக்கத்தில் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், ரேசல், பாலாஜிசக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “குட் நைட்”. உறக்கத்தில் வரும் குறட்டை என்பதை மையமாக வைத்து படத்தை செதுக்கியுள்ளார்,இயக்குநர்.
இயல்பான சிறந்த கதைக்களம். படம் ஆரம்பித்த 10 நிமிடத்திலேயே நம்மை கதைக்குள் அழைத்து செல்கிறது திரைப்படம். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாக இயக்கியுள்ளார் இயக்குனர். குறட்டையால் ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் பிரச்னையை இந்த அளவிற்கு நகைச்சுவையோடும், சென்டிமென்ட் உடனும் காட்டமுடியுமா என ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
நமது நண்பன், பக்கத்து வீட்டுக்காரர், நல்ல பழக்கமான நபர் என்பது போல் தோன்றுகிறது மணிகண்டனை திரையில் பார்க்கையில். வெகு இயல்பாக நடிப்பில் துவம்சம் செய்துள்ளார், மணிகண்டன். நகைச்சுவை, சோகம் என அனைத்திலும் வெளுத்து வாங்கியுள்ளார். கதாநாயகி மீதா, துணை நடிகர் ரமேஷ் திலக் என அனைவரும் சிறப்புக் காட்டியுள்ளனர். இந்த மாதிரி ஒரு மச்சான் நமக்கு இல்லையே என ஏங்க வைக்கும் வகையில் ஒரு காட்சியில் மெய் சிலிர்க்க வைத்துள்ளார், ரமேஷ் திலக்.
யதார்த்தமான கதைக்களம், காட்சிப்படுத்துதல், நடிப்பு என படக்குழுவினர் அனைவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. ஒரு நாள் நிம்மதியாக உறக்கம் வேண்டும் என்றால் கண்டிப்பாக குட் நைட் பார்க்கலம். மன நிறைவு. 3.5/5