







பர்ஹானா சொல்ல வருவது என்ன?
டிஜிட்டல் இந்தியாவில் ஆன்லைன் மோசடி, இணையதள மோசடிகள் என்பது அதிகரித்து வருகிறது. அதன்படி நடக்கும் கால் சென்டர் மோசடி குறித்த படம் இது. குடும்ப சூழ்நிலை கருதி சம்பளம் அதிகமாக கிடைக்கும் என ஆபாசமாக பேசக்கூடிய கால் சென்டரில் பெண் ஒருவர் வேலைக்கு சேருகிறார். அங்கு அவருக்கு நிகழும் சம்பவம் தான் படத்தின் கதை.
இந்த காலத்திற்கு ஏற்ப கதைக்கரு. அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய நிகழ்வு, விழிப்பணர்வு படம் என வர்ணிக்கப்பட்டாலும். கால் சென்டரில் வேலைக்கு சேரும் பெண் முஸ்லீம். அதேபோல் படத்தின் பெயர் பர்ஹானா. இதனால் விமர்சனங்கள் எழத்தொடங்கி இயக்குனர் சொல்ல வந்த கதையின் நோக்கமே மாறிவிட்டது.
ஒரு வரவேற்புக்காக வேண்டும் என்றே இஸ்லாம் மதத்தை இழுத்தது போல் தெரிகிறது. எந்த மத பெண்ணாக இருந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் வாழ வேண்டும் என்ற வரையறை இன்றும் பல குடும்பங்களில் உள்ளது. தங்கள் கனவு, ஆசை, லட்சியம் என ஏதோ ஒரு கொள்கையை முன்னிருத்தி ஒருவரின் வாழ்க்கை திசை மாறி செல்கிறது. அப்படியான கதாபாத்திரம் தான் பர்ஹானா.
சென்னையில் வாழும் ஏழை முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்(பர்ஹானா). இவர் தனது கணவர் ஜித்தன் ரமேஷ், மூன்று குழந்தைகள் என அருகருகே உறவினர்கள் உடன் இஸ்லாம் மதத்தினர் வாழும் பகுதியில் வசிக்கிறார். குழந்தைகள் எதிர்காலம் கருதி எதிர்ப்புக்கு மத்தியில் வேலைக்கு செல்கிறார். அங்கு கூடுதல் சம்பளம், இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்பதற்காக பிரண்ட் ஷிப் ஷாட் என்ற பிரிவுக்குள் செல்கிறார். அங்கு வரும் அழைப்புகள் அனைத்தும் ஆபாச அழைப்புகள் தான். தங்கள் சுயவிவரத்தை சொல்லாமல் பணி செய்வர்கள் வரும் போன் கால்களை எடுத்து பேச வேண்டும். அதன்படி வரும் போன் காலில் ஒருவரிடம் அன்பாக பேச ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்கள் இருவருக்குள் நேரும் கதைக்களம் தான் படம். மறுபுறம் பேசும் நபரால் ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மையமாக வைத்து கதைக்களத்தை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.
தனக்கென்ற பாணியல் இயல்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அன்பு, அச்சம் என வரும் காட்சிகளில் தனது நடிப்பில் பார்ப்பவர்களை மெய் மறக்கச் செய்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ஜித்தன் ரமேஷ் படத்தில் நடிக்க வந்துள்ளார். தனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுங்கள் நடிப்பில் நிரூபிப்பேன் என்பதை இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மூலம் காட்டி இருக்கிறார். பிற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். செல்வராகவன் கதாபாத்திரம் படத்தின் சர்ப்ரைஸ்.
ஒளிப்பதிவு, இசை இன்னும் மேம்பட்டிருக்கலாம். ஆங்காங்கே படத்தின் காட்சிகள் தொய்வு அடைந்திருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது படம். கதாபாத்திரமாக பார்த்தால் இது படம். மதச்சாயலாக பார்த்தால் இது சர்ச்சை.
இந்த படம் சில கருத்து மோதல்கள் மற்றும் சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.