







கண்ணன் ரவி குரூப் தயாரிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இராவண கோட்டம். மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தன்னை நிரூபித்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பு தான் இது. படம் ப்ரொமோஷன் பணியின் போதே ஒரு பக்கம் முத்துராமலிங்கத் தேவர், மறுபக்கம் அம்பேத்கர் என இருவரின் படமும் இடம்பெற்றது. எனவே மதயானைக் கூட்டம் போல் இதுவும் சாதி படம் என கருதப்பட்டது. அது பொய் என நிரூபித்த இந்த படம், சீமைக் கருவேல மரம் அரசியலை ஆழந்து கூறியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு, கீழத்தெருவைச் சேர்ந்த இருதரப்பு மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலத்தெரு மக்களுக்காக போஸும் (பிரபு) கீழத்தெரு மக்களுக்காக சித்ரவேலும் (இளவரசு) ஊர்த் தலைவர்களாக இருந்து வழிநடத்தி கொண்டு செல்கின்றனர். இருவரின் நட்பால் சாதி பிரச்னை ஏதும் இல்லாமல் ஊர் ஒன்றுபட்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஊருக்குள் வந்தால் பிரிவினை வந்துவிடுமோ என கணித்த மக்கள், அரசியல் வாதிகள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தான் அரசியல் லாப நோக்கத்திற்காக இரு தரப்பு மக்கள் இடையேயும் சூழ்ச்சி செய்யும் வேலை தொடங்குகிறது. இதனால் பிரிவினை ஏற்பட்டதா, ராமநாதபுரம் முதுகுளத்தூரில் உள்ள சீமைக்கருவேல மர பிரச்னை, கார்ப்ரேட் மாஃபியா என அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் கதையை நகர்த்தி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.
மதயானைக் கூட்டம் படத்தில் ஒரு தரப்பு வாழ்வுமுறையை எப்படி ஆழ்ந்து உள்நோக்கி இயக்குனர் கூறி இருப்பாரோ, அதேபோல்தான் இந்த படத்திலும் மிக அழகாக ராமநாதபுர மக்களின் வாழ்வியல் முறையை கண்ணாடி போல் பிரதிபலித்து கூறி இருக்கிறார். சாதிப் பிரச்னையும், அரசியலும் வேறு இல்லை என்பதை இந்த படம் உணர்த்தி உள்ளது.
கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் நடிகர் சாந்தனு. பரியேறும் பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்தது போல் ஒன்றும் தெரியாத பெண்ணாக எதற்கெடுத்தாலும் அப்படியா என வெள்ளந்தி தோற்றத்தை காட்ட முயலுகிறார் கதாநாயகி கயல் ஆனந்தி. வழக்கம் போல கம்பீரமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார் நடிகர் பிரபு. அதேபோல் தனது நடிப்பு முதிர்ச்சியை வெளிப்படுத்தி தேவைக்கேற்ப நடித்து, காண்போரை ரசிக்க வைத்துள்ளார் நடிகர் இளவரசு.
ஆங்காங்கே காட்சிகள் தொய்வுடன் காணப்பட்டாலும் படம் சொல்லும் ஒருசில மெசேஜ்கள் வரவேற்கத்தக்கது. அதேபோல் இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் மூலம் சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
3.5/5