Take a fresh look at your lifestyle.

*”ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க சொன்ன நீங்கள் மது, புகைக்கு எதிராக பேசாதது ஏன்…?”*

87

மது, புகை பழக்கம் கொண்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும் *நடிகர் விஜய்க்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்.*

திரைப்படங்களில் நடித்தோம், கோடிகளில் பணம் சம்பாதித்தோம் என்றில்லாமல், வளரும் தலைமுறையினரை வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக கருதாமல், அவர்களை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்று முடிந்த பள்ளி பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அவ்விழாவில் சட்டமன்ற தொகுதி வாரியாக மூவரை தேர்வு செய்து பரிசும், விருந்தும் அளித்து பாராட்டியுள்ளதோடு, “ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என உங்கள் பெற்றோர்களிடம் சொல்லுங்க, நீங்க சொன்னா அவங்க கேட்பாங்க, ஏன்னா மாணவர்கள் தான் நாளைய வாக்காளர்கள்,” அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி படியுங்கள் என பேசியுள்ள நடிகர் விஜய் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

அதே சமயம் இளம் தலைமுறையை தவறான வழிக்கு கொண்டு செல்லும், சமுதாயத்தை சீரழித்து வரும் “மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற விசயங்களிலும் அவற்றை செய்யாதீர்கள் என பெற்றோர்களிடம் குறிப்பாக உங்கள் தந்தையிடம் கூறுங்கள், நீங்க அழுத்தி சொன்னா அப்பாக்கள் கண்டிப்பாக கேட்பாங்க” எனக் மாணவச் செல்வங்கள் மத்தியில் வலியுறுத்தி பேசாதது ஏமாற்றமே. ஏனெனில் தங்களின் முன்மாதிரியாக நடிகர்களின் நடிப்பை நம்பி அதனை அப்படியே பின்பற்றி தங்களை விட்டில் பூச்சிகள் போல அழித்துக் கொள்ளும் வகையில் பல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரே மது, புகை பழக்கத்திற்கு அடிமையாகி, தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சூழலுக்கு விஜய் போன்ற முன்னணி நடிகர்களே காரணம் என்றால் அது மிகையில்லை.

எனவே வருங்கால இளம் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும், அதற்கு படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என கவலைப்படும் நடிகர் விஜய் அவர்களின் கவலை உண்மையாக இருக்குமானால் சமுதாயத்தை சீரழித்து வரும் மது குடிப்பது, ஸ்டைலாக புகை பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் இனி வருங்காலங்களில் நடித்து இளம் தலைமுறையினர் தவறான வழி செல்ல நானே காரணமாக இருக்க மாட்டேன் என்று மற்ற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் முன்மாதிரி நடிகராக பொதுவெளியில், ஊடகங்கள் முன் உறுதிமொழி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது. அவ்வாறு அவர் பொதுவெளியில் உறுதிமொழி கொடுக்க, எடுக்க தவறினால் இன்றைய தினம் (17.06.2023) மாணவர்கள் மத்தியில் பேசியது வெறும் விளம்பரத்திற்கான படப்பிடிப்பாக மட்டுமே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
17.06.2023 / பிற்பகல் 1.40மணி.

https://twitter.com/PONNUSAMYMILK/status/1669979601794396161?t=-UqaH2MB032K39OLlbdB0Q&s=01