பரிசு’ திரைப்பட விமர்சனம்

‘பரிசு’ திரைப்பட விமர்சனம்

ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புது முகங்கள் நடித்துள்ளனர்.இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர்.

 இந்தப் ‘பரிசு’ திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.

 

ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ்,பின்னணி இசை – சி.வி. ஹமரா ,பாடல்கள் -கே ராஜேந்திர சோழன் ,படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி – இளங்கோ. தயாரிப்பு: ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.

 

படம் எதைப் பற்றிப் பேசுகிறது?

 

ஜான்வி பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி.படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவள்.அவளது தந்தை ஒரு ராணுவ வீரர்.

ஜானகியின் அழகையும் அறிவையும் பார்த்துவிட்டு அவள் படிக்கும் கல்லூரியில் சில மாணவர்கள் பின் தொடர்கிறார்கள். நெருங்கிப் பழகவும், அன்பளிப்பு கொடுக்கவும்,பூங்கொத்து பரிசளிக்கவும் என்று சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவள் மீது ஆசையுடன் காதலைச் சொல்ல ஏங்குகிறார்கள்.

ஆனால் அவளோ எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறாள். அது ஒரு பருவக் கோளாறு என்று நினைத்து எந்த விதக் கோபமும் காட்டாமல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இலகுவாக புறந்தள்ளிவிட்டுத் தனது இலட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறாள்.

விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் அவள், தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறாள்.

 

ஒரு நவீனப் பெண்ணாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவளாக இருக்கிறாள். விவசாய வேலைகளில் ஈடுபடுவதும் டிராக்டர் ஓட்டுவதும் என்றும் அதையும் விடாமல் செய்கிறாள்.அவளைத் தோழிகள் லேடி நம்மாழ்வார் என்கிறார்கள்.சமூக சேவையிலும் ஆர்வம் உண்டு.கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொண்டு கிராமங்களைச் சுத்தம் செய்கிறாள்.

முறையான பயிற்சிக்குப் பின்

குறி பார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொள்கிறாள்.எகிப்தில், கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.

இவ்வளவும் செய்யும் ஜான்வி,

தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவு காண்கிறாள்.

 

தனது உறவினர் சென்ட்ராயன் வீட்டு நிகழ்ச்சிக்கு

ஜான்வி

சென்றபோது அங்கே நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர் ராஜேஷின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்குள் ஒரு புரிதல் உண்டாகிறது.

ராஜேஷ் அவளைக் காதலிப்பதாகக் கூறுகிறான் .ஆனால் தனது லட்சியத்திற்குப் பிறகு தான் எல்லாமே என்று அவள் தள்ளி வைக்கிறாள்.

 

அப்படிப்பட்டவள் ஒரு கார் மீது லாரி மோதி விட்டு தப்பிச்செல்லும் விபத்தைக் கண்ணெதிரே பார்க்கிறாள்.காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறாள்.அதன் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் ஜான்வியைக் கடத்துகிறார்கள். அவள் அந்த எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? அவள் தனது ராணுவக் கனவை நிறைவேற்றினாளா?அந்தப் பாதையில் அவள் எதிர் கொள்ளும் போராட்டங்கள் தான் 130. 12 நிமிடங்கள் கொண்ட ‘பரிசு’ படத்தின் மீதிக் கதை.

 

இது ஒரு பெண் பாத்திரத்தினை மையம் கொண்ட கதையாக உருவாகி இருக்கிறது.

மகனோ மகளோ பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் பரிசு என்பது அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் என்று இதில் கருத்தாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படித் தனது மகளை ராணுவத்தில் சேர்க்க விரும்பும் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஒரு மகளின் கதை தான் இது.அந்தப் பரிசை கொடுக்க கதாநாயகி படும் சவால்களும் சோதனைகளும் தான் இந்தப் படம்.

 

படத்தின் பிரதான ஜான்வி பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் ,பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் வருகிறார்.

பல்வேறு தோற்றங்களில் வெளிப்பட்டு அந்தப் பாத்திரத்தின் இயல்பை உணர வைக்கிறார்.

 

எதையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் நிதானமானகுணம் கொண்டவராக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார். இப்படி ஆறு பேருடன் மோதும் காட்சிகளில் அவர் எகிறிக் குதித்து தனது சாகசத்தைக் காட்டி வியக்க வைக்கிறார். விவசாயம் செய்பவராக டிராக்டர் ஓட்டிக்கொண்டு ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று காட்டுகிறார் .அது மட்டும் அல்ல ராணுவ வீரராக மிடுக்குடன் தோன்றுகிறார். இவர் ஆர்ப்பாட்டமான வசனங்கள் பேசாமல் மென்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.வன்மையான மனதுடன் மென்மையான முறையில் தான் சவால்களைச் சந்திக்கிறார்.

 

இவரது பாத்திரம் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள் சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் விதைக்கிறது.

 

ஜான் ஜான் என்று கதாநாயகியை வளைய வளைய கல்லூரியில் சுற்றி வரும் மாணவன் பாத்திரத்தில் கிரண்பிரதாப் நடித்துள்ளார். தனது உடல் மொழியாலும் நடவடிக்கைகளாலும் அவர் சிரிக்க வைக்கிறார்.

ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார்.

 

மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.ஆனால் பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலியாகவே உள்ளன. அந்த நகைச்சுவைக் கூட்டணியைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

 

ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன்,

அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக வருகிறார்.

தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார்.

 

மருத்துவமனை நடத்திக் கொண்டு உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் நடித்துள்ள சுதாகரும் தனது வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.

 

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. படம் தொடங்கியதும் அருவியின் அழகுடன் முதல் பாடல்காட்சி வருகிறது. அதற்குப் பிறகு இடம் பெறும் பாடல்களின் பின்புலங்களும் ரசிக்கும் படி உள்ளன.

 

படத்துக்குத் தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் சங்கர் செல்வராஜ்.

 

‘நன்னாரே’ பாடலின் சாயலில் ஒரு பாடல் ஒலித்தாலும் பிற பாடல்களின் மெட்டுகளை ரசிக்கும்படி இசையமைத்துள்ளார் ராஜீஷ்.

குறிப்பாக ‘ஆட்டங்கள் ஆடிப் பார்ப்போமே ‘,’கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா ?’ ‘போராடலாமா ?’ போன்ற பாடல்கள் இசையாலும் வரிகளாலும் கவனிக்க வைக்கின்றன.ஒரு பாடலில்

தூய்மை இந்தியா பற்றிய கருத்துகள் வருகின்றன.

வரிகள் ராஜேந்திர சோழன்.

 

ஆர்ப்பாட்டம் இல்லாத ஹமரா வின் பின்னணி இசை, படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது.

 

திரைக்கதையின் போக்குக்கு ஊறு செய்யாமல் படத்தொகுப்பாளர்கள்

சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி படத்தொகுப்பு செய்துள்ளனர்.

 

சண்டை இயக்குநர்கள் கோட்டி மற்றும் இளங்கோ இருவரும்

கதாநாயகி டூப் இல்லாமல் போடும் சண்டை காட்சிகளை இயல்பாக அமைத்துள்ளனர்.

 

‘ஆர்மி என்பது ஒரு கலாச்சாரம்’ என்று ராணுவத்தை உயர்த்திப் பிடித்து, இந்திய ராணுவத்தின் நூற்றாண்டு கடந்த வரலாற்றையும் சில வசனங்கள் பேசுகின்றன.

 

பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்படி பல வசனங்கள் உள்ளன.ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஜான்விகா பேசும் வசனம் ஒரு உதாரணம்.

அவர் பேசும்போது,

‘1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசும்போது பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார்.ஜான்சி ராணி லட்சுமி பாய் வாளேந்தி சண்டையிட்டது போல் பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவிற்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும் ‘என்றதை நினைவூட்டிப் பேசும் வசனம் பெண்களுக்குச் சரியான ஊக்கமும் உந்துதலும் தரும்.

 

வணிக ரீதியிலான படம் தான் என்றாலும் ஆபாசமோ இரு பொருள் வசனங்களோ தேவையற்ற வன்முறையோ இல்லாமல் பெண்களுக்கு நம்பிக்கையையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

 

படம் உருவாக்கத்தில் சில குறைகள், கேள்விகள் இருந்தாலும் கலா அல்லூரியின் நல்ல கருத்து சொல்லும் நோக்கத்தைப் பாராட்டலாம்.

 

குடும்பத்துடன் குறிப்பாகப் பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படமாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிற வகையில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.

kollywood newsparisuParisu movie reviewtamil cinema newstamil film news
Comments (0)
Add Comment