*‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!*

*‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!*

பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது.

“மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது..,
“‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன் இணைந்து நடந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாடல் திரையில் மிக அழகாக உருவாகியுள்ளது. பிரபுதேவா சார் இதில் தன் சிறந்த நடனங்களில் ஒன்றை வழங்கியிருக்கிறார். கொரியோகிராஃபர் சேகர் மாஸ்டருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஏ.ஆர், ரகுமான் சார் இந்த பாடல் முழுவதும் வருகிறார். அவரது இருப்பு, பாடலுக்கு கூடுதல் அழகையும் சுவாரஸ்யத்தையும் தந்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்குமாறு சொன்ன போது , அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இது படத்தை காணும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். அவரை முதல் முதலாக நடிகராக இயக்கிய அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. படம் தொடங்கிய முதல் நாள் முதல் அவர் தந்த ஆதரவும் ஊக்கமும் மிகப்பெரிது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். செட்டில் அவர் நடிகராக ரசித்துக் கலந்து கொண்ட தருணங்கள் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.” திரையில் இதை காணும் ரசிகர்களுக்கும் இது எதிர்பாராத அனுபவமாக இருக்கும்.

அதே போல் பிரபுதேவா கதாப்பாத்திரமும் இப்படத்தில் மிகச்சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படும் பிரபுதேவா, இந்தப் படத்தில் ‘பாபூட்டி’ என்ற இளம் திரைப்பட நடன இயக்குநராக நடித்துள்ளார். நடனம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

மேலும், யோகி பாபு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘கவரிமான் நாராயணன்’ மற்றும் ‘ஆட்டுக்கால் அழகு ராசா’ என்ற இரண்டு கதாபாத்திரங்களுடன், மூன்றாவது கதாபாத்திரமாக ‘துபாய் மேத்யூ’ என்ற வேடத்திலும் தோன்றுகிறார். இது படத்தின் விசித்திரமான மற்றும் வித்தியாசமான அம்சமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும். மேலும் “யோகி பாபு சாரின் கதாபாத்திரம் தொடர்பான ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆடியோ வெளியீட்டில் அறிவிக்கப்படும்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்தார்.

இப்படத்தில் அஜு வர்கீஸ் (‘லார்ட் ஜோகோவிச்’), அர்ஜுன் அசோகன் (‘லூனா’), சாட்ச் (‘ஜாஸ்மின்’), சுஷ்மிதா (‘சில்க்’), நிஷ்மா (‘நக்மா’), ஸ்வாமிநாதன் (‘பெரிய பண்ணை’), ரெடின் கிங்ஸ்லி (‘கண்ணு குட்டி’), ராஜேந்திரன் (‘மல்லிகார்ஜுன்’), தீபா அக்கா (‘கற்பூரழகி’), சந்தோஷ் ஜேக்கப் (‘தவசி’) மற்றும் ராம்குமார் (‘ராஜ் பப்பர்’) ஆகிய வேடங்களில் நடித்துள்ளனர். “இத்தனை திறமையான கலைஞர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரும் ஆசீர்வாதம். ரசிகர்கள் இந்த திரைப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் போன்ற மாபெரும் கலைஞர்கள் ஒரே படத்தில் இணைவது மட்டுமல்லாமல், புதுமையான கதை சொல்லலுடன் “மூன்வாக்” ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது. இயக்குநர் மனோஜ் NS இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார் என்ற ஆவலைத்தூண்டியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம் 2026 மே மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ar rahmankollywood newsMoon WalkPrabu devatamil cinema news
Comments (0)
Add Comment