துரைமுருகன் சம்மந்தி கண்ணன் ரவி விளக்கம்

*பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!*

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்திருக்கிறார். ஜாம்பி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, விரைவில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues), நடிகைகள் அனு கீர்த்தி, யாவீ, நடிகர் பீட்டர், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்,

”அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு முன்னர் நிறைய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், தயாரிப்பாளர் கண்ணன் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இப்படத்தின் *படத்தொகுப்புப் பணிகளை நிறைவு செய்த பிறகு, சென்னையில் இருந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவியைத் தொடர்புகொண்டு, படத்தைத் திரையில் காண்பதற்காக வருகை தருமாறு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர், ‘இங்கு வேண்டாம். துபாய்க்கு வாருங்கள். அங்கு திரையிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு துபாய்க்குச் சென்றபோது, ‘இரண்டு வாரங்கள் இங்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு படத்தைத் திரையிடலாம்’ என்றார். அதன் பிறகு படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். இந்தத் திரைப்படத்தைச் சிறந்த முறையில் விளம்பரப்படுத்துவேன் என்றார். அவருடைய இந்த எண்ணத்திற்காகவே இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் ஸ்வரூபா பேசுகையில்,

”இது என்னுடைய முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர், நடிகைகளின் ஆடை வடிவமைப்பு முழுவதும் இயக்குநரின் சிந்தனைதான். அதனை அவருடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, கலந்துரையாடிய பிறகு, இயக்குநரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தினேன்” என்றார்.

இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் பேசுகையில்,

”மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு தீபாவளிப் பண்டிகை நிகழ்வின்போது மேடை ஏறினேன். தற்போது மீண்டும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் ‘பேங் பேங்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவிதான் இன்றைய சூழலில் டாக் ஆஃப் தி டவுன் (Talk of the Town). அவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக வெளியாகி வருகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவரை விமர்சிக்கிறார்கள். இதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அவர் இந்த மேடையில் வழங்குவார் என எதிர்பார்க்கிறேன்.

1990-களில் துபாய் வல்லரசாக மாறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், இங்கிருந்து சென்ற பலரில் அவரும் ஒருவர். துபாய் நாட்டின் வளர்ச்சியுடன் இவரது வளர்ச்சியும் நடந்தது. பொதுவாக, இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அங்கு கடுமையாக உழைத்து, பல பதவிகளில் பணியாற்றி, அந்த நாட்டு குடிமகனாக மாறி அங்கேயே வாழ்வார்கள். இவர்களில் மிகச் சிலர் மட்டும்தான் வெளிநாடுகளில் வசதியான வாழ்க்கை கிடைத்த பிறகும், தாயகத்தைப் பற்றியும் சொந்த ஊரைப் பற்றியும் நினைத்து, அவர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் எனத் திட்டமிடுவார்கள்.

ஜோஹோ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவைப் போல, கண்ணன் ரவியும் தான் பிறந்த மண்ணிற்காக ஏதேனும் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு, நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறார். செய்தும் வருகிறார்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம் பேசும்போது, ‘நம்ம தமிழ் சினிமா… நம்ம தமிழ் சினிமா…’ என்றுதான் பேசுவார். தமிழ் சினிமாவில் செயல்படும் நிறைய சங்கங்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தைப் பற்றி, பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வில் விரிவாகப் பேசுகிறேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை வடிவேலுவும், பிரபுதேவாவும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.

நடிகை அனு கிருத்தி பேசுகையில்,

”தமிழில் நான் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. வடிவேலு – பிரபுதேவா போன்ற சாதனையாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்று, அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த வாய்ப்பு இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. இதற்காகவும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ‘பேங் பேங்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நாளுக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,

”அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களை என் சொந்த ஊரில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், மக்களுடனும் கொண்டாடுவது வழக்கம். என் ஊரைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு விசேஷ நாட்களில் உதவிகள் செய்து சந்தோஷப்படுத்துவதுண்டு.

சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்காகச் செலவழித்திட வேண்டும். அப்படிச் செலவழிக்கவில்லை என்றால், அந்தக் குறிப்பிட்ட பணம் தானாகச் சென்றுவிடும் எனும் எண்ணம் கொண்டவன் நான். அதனால்தான் இன்று வரை நான் சம்பாதிப்பதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மக்களுக்காகச் செலவழித்து வருகிறேன்.

பிரபுதேவா என்னைச் சந்தித்து, ‘ஒரு புது இயக்குநர், ஜாம்பி கதை… கதையைக் கேட்டு வாய்ப்பு தாருங்கள்’ என்று சொன்னார். அந்தக் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்ட பிறகு இயக்குநர் சாம் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுவார் என நம்பினேன். அவர் புது இயக்குநராக இருந்தாலும், அவருக்கான குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வடிவேலு – பிரபுதேவா ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும் சொல்லாமல், அனைத்து விஷயங்களிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் நிச்சயமாகப் பேசப்படும்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை இந்தோனேசியாவில் நடத்தலாம் என்ற ஆலோசனையை நான்தான் முதலில் முன்வைத்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக வெடிக்காத அந்தத் தீவில் உள்ள எரிமலை, படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் அங்கு சென்றிருந்தபோது வெடித்தது. அதனையும் படக்குழு படமாக்கியுள்ளது. நானும் எரிமலையைப் போலத்தான். எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன். ஏனெனில், நானும் கோபம் – அன்பு – பாசம் ஆகிய உணர்வுகளைக் கொண்ட சாதாரண மனிதன்தான்.

இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள். இவர்கள் அனைவரும் படத்தில் தான் சண்டை போட்டார்களே தவிர, படப்பிடிப்புத் தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

 

ஜாம்பி கதையாக இருந்தாலும், அந்தக் கதையை முழுமையாகக் கேட்டபின், டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் கோணத்திலிருந்து சில விஷயங்களைச் சொல்லி, சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று சொன்னேன். இயக்குநரும், படக்குழுவினரும் அதை ஏற்றுக்கொண்டு நல்லதொரு படைப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படம் தான் உண்மையிலேயே கூட்டுத் தயாரிப்பு. படம் நன்றாக இருக்கிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, அவரைப் பற்றியும், அவருடைய பின்னணியைப் பற்றியும், அண்மையில் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் எழுந்த ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுக்கு உரிய விளக்கத்தை நிதானமாகவும், தெளிவாகவும், உறுதிப்படவும் அளித்தார்.

மேலும், அவரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், அரசியலில் சினிமாவின் சக்தி குறித்தும், தன்னுடைய சொந்தக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். My

Bang bangKannan ravikollywood newsPrabu devatamil cinema news
Comments (0)
Add Comment