*புதுமுகங்களுக்கு வாய்ப்பு – படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய யாஷ்-ன் தாயார்*

ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு “கொத்தாலவாடி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படமான “கொத்தாலவாடி”-இல் பிருத்வி அம்பார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காவ்யா ஷைவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஶ்ரீராஜ் எழுதி, இயக்குகிறார். சமீபத்தில் வெளியான “கொத்தாலவாடி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், படக்குழு தற்போது “கொத்தாலவாடி” படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. படத்தின் டீசர் கொத்தாலவாடி உலகினை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாஸ் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டீசரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒளிப்பதிவாளர் கார்த்திக்-இன் விஷூவல்கள் ஆழமாகவும், உணர்வுப்பூர்வமான பின்னணியை பிரதிபலித்தன.

மேலும், அபினந்தன் காஷ்யப்-இன் பின்னணி இசை காட்சிகளுடன் ஒன்றியிருந்தது. பிருத்வி அம்பார் ரக்கட் தோற்றத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 90 நொடிகள் ஓடும் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும், இயக்குநர் சிராஜ் மிகவும் உறுதியான கதையுடன் வருவதை டீசரிலேயே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தலைப்பான “கொத்தாலவாடி” கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுப்பெட் தாலுக்காவில் உள்ள கிராமத்தை தழுவி சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்திலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கதையோடு ஒன்றியிருக்கவே படப்பிடிப்பு இந்த கிராமத்தில் நடந்ததாக படக்குழு தெரிவித்தது.

இப்படத்தில் கோபால் தேஷ்பாண்டே, ராஜேஷ் நடரங்கா, அவினாஷ், காவ்யா ஷைவா, மன்சி சுதிர், ரகு ரமனகோப்பா மற்றும் சேத்தன் காந்தரவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இசை பிரிவில் இரு புதிய கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளது. விகாஷ் வசிஷ்தா படத்தின் பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ள நிலையில், அபினந்தன் காஷ்யப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ரகு நீனந்தல்லி படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பு பணிகளை ராமிஷெட்டி பவன் மேற்கொண்டுள்ளார். தினேஷ் அசோக் படத்தின் போஸ்டர்களை வடிவமைத்துள்ளார். “கொத்தாலவாடி” திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், மூர்கத்தனமான, சென்டிமென்ட் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

kothalavaditamil cinema newstamil film newsYash
Comments (0)
Add Comment