தேர்தல் வேலைக்கு காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வப் பெருந்தகை அழைப்பு

தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 36 நாட்கள் மட்டும் தான் எஞ்சியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு தொகுதி பங்கீடும் முடிவு பெறுகிற நிலையில் உள்ளது. கடந்த 2004 மக்களவை தேர்தலில் உருவான இக்கூட்டணி 2026 வரை, நடைபெற்ற 2014 மக்களவை தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதில், 2004, 2009, 2019, 2024 ஆகிய நான்கு மக்களவை தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்றிருக்கிறோம். 2006, 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். கடந்த 2021 முதல் ஏறத்தாழ நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி வழங்கப்பட்டு வருகிறது.

 

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த மொத்த வாக்குறுதிகள் 505. இதில் 450-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறைவேற்றி சாதனை படைத்திருக்கிறது. மீதமுள்ள வாக்குறுதிகள் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒத்துழைக்க மறுத்த காரணத்தினால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறதே தவிர, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, வாக்குறுதி கொடுக்காத காலை உணவு திட்டம் போன்ற எத்தனையோ திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு மக்களிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பும், நம்பிக்கையும் பலமடங்கு கூடியிருக்கிறது. அவர் எட்டியிருக்கிற உயரத்தை எதிர்கட்சிகளால் நெருங்க முடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அதற்குக் காரணம் தமது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நல்லாட்சியை வழங்கியிருக்கிறார்.

 

தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிற போது, அனைவரையும் பிரமிக்க வைக்கிற வகையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாகும். நாட்டின் சராசரி வளர்ச்சியை விட இது இருமடங்கு அதிகமாகும். தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் ரூபாய் 3.62 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தேசிய சராசரி வருமானம் ரூபாய் 2.05 லட்சமாக குறைவான நிலையில் தான் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை விட, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது ஒரு மகத்தான சாதனையாகும். மேலும், மாநில பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மகாராஷ்டிராவில் ரூபாய் 49 லட்சம் கோடியும், அடுத்த நிலையில் தமிழ்நாடு ரூபாய் 35 லட்சம் கோடி என்கிற நிலையில் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையில் இத்தகைய சாதனைகளை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவிகித பங்கும், நாட்டின் உற்பத்தி மதிப்பில் 9.37 சதவிகித பங்கும் தமிழ்நாடு வழங்குகிறது. ஆனால், ஒன்றிய அரசு வரிப் பகிர்வில் 4 சதவிகிதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகிறது. நேரடி, மறைமுக ஒன்றிய வரித் தொகுப்பிற்கு தமிழ்நாட்டின் பங்கு ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி. ஆனால், வரித் தொகுப்பிலிருந்து 2023-24 இல் தமிழ்நாடு திரும்பப் பெற்றதோ ரூபாய் 45,052 கோடி. இத்தகைய பாரபட்சமாக வஞ்சிக்கப்படுகிற நிலையில் தான், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழக மக்கள் மனம் திறந்து பாராட்டி மகிழ்ந்து வருகிறார்கள். அவர் சுற்றுப்பயணம் செய்கிற இடங்களில் எல்லாம் மக்கள் அன்பை பொழிகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சரின் திட்டங்களினால் பயனடைந்த மகளிர் அத்தனை பேரும் தமிழ்நாடு முதலமைச்சர் மீது அன்பை பொழிந்து ஆதரவை அளித்து வருகிறார்கள்.

 

இதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏவிவிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு எப்பொழுதுமே தில்லிக்கு அவுட்ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கம்பிரமாக உரத்தக் குரலில் முழங்கி வருகிறார்.இது அவரது அரசியல் பேராண்மையை வெளிப்படுத்துகிறது. இதனால் தான் தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறோம். கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு ஓரிரு நாளில் நிறைவு பெறும். இக்கூட்டணியில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்று இதுவரை முழு விவரம் வெளிவரவில்லை. அங்கே குழப்பம் தான் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று பிரகடனம் செய்த த.வெ.க., கூட்டணிக்கு வருமா என்று திரைமறைவு பேரங்கள், அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை வெளிப்படைத்தன்மையோடு, ஒளிவு மறைவின்றி கூட்டணி கட்சிகள் ஒரே லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வளர்ச்சியை பெறச் செய்து மகத்தான சாதனைகளை படைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த கோடிக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நரேந்திர மோடியும், அமித்ஷாவும், எத்தனைமுறை தமிழ்நாட்டிற்கு வருகிறார்களோ, அத்தனை முறையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உரமாக அமைந்து மேலும் வெற்றிகளை குவிக்க வழிவகுக்கும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். வகுப்புவாத சக்திகளின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை முறியடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம் என்ற உணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு, வருகிற 36 நாட்களும் கண் துஞ்சாது, அயராது உழைத்து, வகுப்புவாத பா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணி மூலம் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுக்கின்ற மகத்தான களப் பணியில் ஓய்வறியாமல் உழைக்க காங்கிரஸ் கட்சியினரை அன்போடு அழைக்கிறேன்.

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)

Politicalpriyanga ganthiRahul gandhiSelvaperunthagaitamilnadu political
Comments (0)
Add Comment