Take a fresh look at your lifestyle.

’பார்ட்னர்’ குழந்தைகளுடன் சேர்ந்து தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் – நடிகர் ஆதி நம்பிக்கை

82

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பார்ட்னர்’. இவர்களுடன் யோகி பாபு, ஜான் விஜய், ரோபோ சங்கர், பாண்டியராஜன், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை வி சசிகுமார் மேற்கொண்டிருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் சற்குணம், தாஸ் ராமசாமி, தங்கம் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நாயகன் ஆதி படம் பற்றி பேசுகையில், “பாட்னர் படத்தின் கதையை இயக்குநர் மனோஜ் எனக்கு முதலில் போனில் தான் சொன்னார்.‌ ‘ஐந்து நிமிடத்தில் படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகிறேன். பிடித்திருந்தால் கதையாக விவரிக்கிறேன்’ என்றார். ”பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ரூம் மேட்ஸ்… மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக்கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட்… அழகான ஃபிகராக மாறிவிடுகிறார்.” இதை கேட்டதும் சுவாரசியமாக இருக்கிறது என சொல்லி முழு கதையும் கேட்டேன். ஆனால் பிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி ? பின் விளைவு என்ன? என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

நான் சீரியஸாக கதைகளை கேட்டு உணர்வு பூர்வமாக நடித்து வருபவன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு இயக்குநரிடம் இப்போது எடுக்க போகும் காட்சி என்ன? இதற்கு முன் காட்சி என்ன? நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும்? என கேட்டேன். அப்போது இயக்குநர், ‘ரொம்ப யோசிக்காதீங்க’ என்றார். அதற்குப் பிறகு எனக்கு புரிந்து விட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து சுற்றுலா செல்வது போல் ஜாலியாக இருக்க வேண்டும் என சொன்னதும் ,அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டேன்.

சக கலைஞர்களுடன் ரசிகர்களை எப்படி சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்து நடித்தோம். ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்கிறோம். எங்களுடைய சந்தோஷம் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம். நடிகர் நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஜாலியாகவும் அதே சமயத்தில் கஷ்டப்பட்டும் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் தமிழில் முதல் படத்தை தயாரிக்கிறார். படத்திற்கான பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்திருக்கிறார். இந்த ‘பாட்னர்’ படத்தை குழந்தைகளுடன் திரையரங்குகளுக்கு சென்று, பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷமாக பார்க்க வேண்டிய படம். ரொம்ப யோசிக்காமல் படம் பார்த்தீர்கள் என்றால்.. படம் நிச்சயம் பிடிக்கும். கதை, திரைக்கதை என ஆழமாக சென்று பார்த்தால் எதுவும் இல்லை. அதற்கான படம் இது இல்லை. சந்தோசமாகவும்.. மனக்கவலைக்கு மருந்தாகவும் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகை ஹன்சிகா பேசுகையில், ”எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் காமெடி இருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக பணியாற்றினோம். இந்த படத்தில் நீங்கள் வித்தியாசமான ஹன்சிகாவை காணலாம். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை புரிந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் ஜான் விஜய் பேசுகையில், ”இந்தப் படத்தின் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு படபிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் இயக்குநர் என்னிடம், ‘ நீங்கள் ஒரு பிசினஸ்மேனாக நடிக்க வேண்டும் என்றார். அதன் பிறகு உங்களுடன் ஒரு கும்பல் இருக்கும் என்றார். அதன் பிறகு இதுதான் உங்களது வசனம் என சொல்லி ஒரு பேப்பரை கொடுத்தார். முதல் வரியை படித்தவுடன் புரிந்து விட்டது. எனது வலது பக்கம் யோகி பாபு. இடது பக்கம் தங்கதுரை. அதன் பிறகு ரோபோ சங்கர். இவர்களைக் கடந்து நான் எப்படி பேசுவது…! அதனால் படத்தில் எப்போதும் கண்ணாடியை கழற்றி இப்படியும் அப்படியுமாக பார்ப்பதுதான் என் வேலை.

பொதுவாக ஒரு பெண் பெண்ணாக நடிப்பது எளிது. ஆனால் ஆணாக நடிப்பது கடினம். ஆனால் ஹன்சிகா தன் திறமையான் நடிப்பால் அனைவரையும் நிச்சயமாக கவர்வார். ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும் நடிகர்கள், காட்சியில் காமெடி தூக்கலாக இருக்க வேண்டும் என கடுமையாக உழைத்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.” என்றார் .

இயக்குநர் சற்குணம் பேசுகையில், ”முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடத்தில் பேச தொடங்கினாலும்.. ஐந்து நிமிடத்தில் அவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் படைத்தவர் தான் தம்பி மனோஜ் தாமோதரன். என்னுடைய இயக்கத்தில் தயாரான படங்களில் தொடர்ந்து அவர் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அதன் போது மிகப் பெரிய தேடலையும், கடின உழைப்பையும் அளித்து கவனம் ஈர்த்தவர் தான் மனோஜ். இந்தக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். இதில் என்ன பிளஸ் என்றால்.. ஒரு மாறுபட்ட கதைகளத்திலிருந்து ஒரு கதையை சொல்லி, இயக்குநர் அறிமுகம் ஆகும்போது  அந்தப் படைப்பை ரசிகர்கள் கொண்டாட தயங்கியதில்லை. அவர்களை ரசிகர்களும், ஊடகங்களும் வரவேற்பு அளிக்கிறது. அந்த வகையில் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட களம். அதிலும் நகைச்சுவையை கொண்டு அடுத்து என்ன…! அடுத்து என்ன..! என சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பார்வையாளனுக்கு அளித்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்படி ஒரு திரை கதையை இந்த படத்தில் மனோஜ் அமைத்திருக்கிறார். அதனால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மனோஜுக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்தை வழங்கி, அங்கீகரிக்கும் என நம்புகிறேன்.

இப்படத்தின் நாயகனான ஆதியை சந்திக்கும் போதெல்லாம் பாட்னர் படத்தை பற்றியும், இயக்குநர் மனோஜ் பற்றியும் நிறைய நேரம் சிலாகித்து பேசி இருக்கிறார். அந்த வகையில் ஆதிக்கும் இந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை உண்டு.
தமிழில் ஒரு சில கதாநாயகர்களுக்குத் தான் இரண்டு மொழிகளிலும் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அமையும். அந்த வகையில் தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தன் இருப்பை எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ ஆதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திர பட்டாளங்கள். அதனால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

எனது இயக்கத்தில் வெளியான ‘வாகை சூடவா’ எனும் படத்தில் ஒளிப்பதிவு உதவியாளராக பணியாற்றிய ஷபீர், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் என வாழ்த்துகிறேன். இயக்குநர் மனோஜின் கடும் உழைப்பிற்கு என்னுடைய சல்யூட். வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் மனோஜ் தாமோதரன் பேசுகையில், “இப்படத்திற்கு  தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மூலமாக ராயல் ஃபார்ச்சூனா நிறுவனத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்தேன். அவர்கள் கதையை கேட்டு படத்தை இயக்கும் வாய்ப்பளித்தனர். எனக்கு தொழிலை கற்றுக் கொடுத்த குருக்களான இயக்குநர்கள் தங்கம் சரவணன், சற்குணம், தாஸ் ராமசாமி ஆகியோர்களுக்கு நன்றி.

முதலில் ஹைதராபாத்திற்கு சென்று ஆதியிடமும், பிறகு மும்பைக்குச் சென்று ஹன்சிகாவிடமும் கதையை சொல்லி சம்மதம் வாங்கினேன். அதன் பிறகு யோகி பாபுவிடமும் சொன்னேன். அதன் பிறகு பாண்டியராஜன், முனீஸ்காந்த், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், பாலக் லால்வானி என அனைவரிடமும் சொன்னேன். இது ஒரு காமெடி படம். லாஜிக் இல்லாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர்.. என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். எனது இயக்கத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இது. அனைவரும் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.