Take a fresh look at your lifestyle.

’டிடி ரிட்டன்ஸ்’ விமர்சனம்

96

நடிகர்கள் : சந்தானம், சுரபி, பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், பிபின், கிங்ஸ்லி, பிரதீப் ராவத்
இசை : ரோஹித் ஆப்பிரகாம்
ஒளிப்பதிவு : தீபக் பதி
இயக்கம் : ஏ.பிரேம் குமார்
தயாரிப்பு : ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் – சி.ரமேஷ் குமார்

1965-ம் காலக்கட்டத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவில் ஒரு குடும்பம் மனிதர்களை வைத்து ஒரு விளையாட்டை நடத்தி வருகிறது. அதில் வென்றால் கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பரிசு, தோற்றால் மரணம். இப்படி ஒரு பயங்கரமான விளையாட்டை நடத்தும் அந்த குடும்பத்தை ஊர் மக்கள் அடித்து கொன்று விடுகிறார்கள்.

தற்போதைய காலக்கட்டத்தில், அதே பாண்டிச்சேரியில் பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் இருக்கும் பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் டீம் கொள்ளையடிக்க, பிபின் டீமிடம் இருந்து மொட்டை ராஜேந்திரன் டீம் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறது. ஆனால், அந்த பணம் எதேட்சையாக சந்தானத்தின் கையில் கிடைக்கிறது. பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, விபரீதமான விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த அந்த பங்களாவில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள்.

இதற்கிடையே, தனது பணம் யாரிடம் இருக்கிறது, என்பதை தெரிந்துக்கொள்ளும் பெப்ஸி விஜயன், நாயகி சுரபியை வைத்து சந்தானத்தை மிரட்டுகிறார், அவர் பணத்தை திருப்பி கொடுப்பதற்காக, அந்த பங்களாவில் இருக்கும் பணத்தை எடுக்க செல்ல, அங்கிருக்கும் பேய்களிடம் அந்த மரண விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். சந்தானம் மற்றும் அவரது நண்பர்களுடன், பணத்தை தேடி வரும் பெப்ஸி விஜயன், பிபின், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் வீட்டில் சிக்கிக்கொண்டு விளையாட்டில் பங்கேற்க இறுதியில் அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்று உயிருடன் வந்தார்களா? அல்லது தோற்றுவிட்டு உயிரை விட்டார்களா? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘டிடி ரிட்டன்ஸ்’.

ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு நடித்திருப்பதால் சந்தானத்தின் நகைச்சுவை கலந்த நடிப்பை ரசிக்க முடிகிறது. கதாநாயகனாக இருந்தாலும், காதல் காட்சிகள், ஆக்‌ஷன், பாடல்கள் என அனைத்தையும் அளவாக செய்துவிட்டு காமெடியில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் சந்தானம், பேசும் டைமிங் வசனங்கள் அனைத்துமே வயிறு நோக சிரிக்க வைக்கிறது.

மாறன், சேது, முனீஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், பிபின், தீனா, கிங்ஸ்லி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் டைமிங் ஜோக் மூலம் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

வித்தியாசமான பேயாக மிரட்டும் பிரதீப் ராவத், வில்லனாக அறிமுகமாகி காமெடி செய்யும் பெப்ஸி விஜயன் உள்ளிட்டவர்களும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் சுரபிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கதையோடு இறுதி வரை பயணிக்கிறார்.

தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும், ரோஹித் ஆப்ரஹாமின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் ஏ.பிரேம் ஆனந்த், சிரிப்பு சரவெடியாக படத்தை இயக்கியிருக்கிறார். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் அரசியல்வாதிகளையும், திரை பிரபலங்களையும் நடுநடுவே நக்கலடிக்கவும் செய்திருக்கிறார்.

வீடியோகேம் விளையாட்டை கதைக்களமாக்கி அதை பேய் பட பின்னணியில் சொன்னாலும், பயம் இன்றி ரசிகர்களை சிரிக்க மட்டுமே செய்திருக்கும் இயக்குநர் ஏ.பிரேம் ஆனந்த், படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை சிரிக்கும்படியான காட்சிகளை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5