Take a fresh look at your lifestyle.

புத்தகங்களை இலவசமாக வழங்கிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

56

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தன்னுடைய இல்லத்தில் இருந்த நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆரம்பித்துள்ளார்.தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:
நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக தந்த மற்றும் என் தந்தையார் எனக்காக கொடுத்து சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆகையால் இந்த புத்தகங்களை பத்திரமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் யோசித்தேன்.இறைவன் ஒரு மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்றால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் படித்திருக்கிறேன், அந்த பண்பை பழகிக்கொண்டும் இருக்கிறேன்.

குறிப்பாக என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், ஒரு சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள். ஆனால் இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன். நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்குவோருக்கு புத்தகத்தில் நான் கையெழுத்திட்டு தந்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நவீன காலகட்டத்தில் கைபேசி, அமேசான் கிண்டில், ஐபேட், மடிக்கணினி போன்றவற்றால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது எனவும், இதனால் புத்தக வாசிப்பை மேலும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இதே போல பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று சரத்குமார் கூறினார். இந்த முன்முயற்சியின் பலனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.