Take a fresh look at your lifestyle.

தமிழக ஆளுநர் அறிக்கை: உள்துறை அமைச்சகம் விளக்கம்

344

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்வானதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால்,

பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக பிளவு கண்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கும் போட்டி, இரு அணியினரிடையே வலுத்து வருகிறது. அதேபோல், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை, அவரை முதல்வராக பதவியேற்க அழைப்பதில் ஆளுநரும் காலம் தாழ்த்தி வந்தார்.

மேலும், பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு தான் உள்ளது. எனவே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகம் வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரினர்.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்த ஆளுநர், அது தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் என கூறப்பட்டது.

இதனிடையே, ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், அவர்கள் நாளைவரும் குற்றவாளிகள் என்ற கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக ஆளுநரின் அறிக்கை குறித்த விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து நேற்று முன்தினம் பிற்பகலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அளித்தார். தமிழக நிலவரம் குறித்து சட்ட வல்லுநர்கள் மூன்று பேரிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும், அவர்களில் இரண்டு பேர், சட்டபேரவையில் இரு தரப்பையும் ஒன்றாக பெரும்பான்மையை நிரூபிக்க கோருமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.