தக் லைஃப் – பட விமர்சனம்

என்னாது இந்தியன் 2 வா

தக் லைஃப்

படத்தின் ப்ளஸ் – இடைவேளை வரை பார்க்கும்படியாக இருக்கிறது. சிம்புவுக்கும் கமலுக்குமான பல காட்சிகள் அருமை.

இடைவேளை ப்ளாக் – யூகிக்க முடியக்கூடியது என்றாலும் அருமை.

பின்னணி இசையும் கேமராவும் துல்லியமான ஒலியும் அட்டகாசம்.

பின்னர் ஆரம்பிக்கிறது சனி. இடைவேளைக்குப் பிறகு படம் நகரவே இல்லை. அப்படியே உட்கார்ந்துகொண்டு விட்டது. ஒரே பழி வாங்கும் படலம் மட்டுமே.

கமலின் வயதான ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை, சில காட்சிகளே வந்தாலும்.

காயல்பட்டின திருநெல்வேலி வட்டார வழக்கு – கமல் இதை தயவுசெய்து விட்டுவிடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

சிம்பு வெர்சஸ் கமல் என்று அட்டகாசமாக உருவாக்கிவிட்டு, அதிலும் குறிப்பாக திரிஷாவை மையப்படுத்தி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதை அம்போவென்று விட்டுவிட்டார்கள்.

தேவையற்ற டிஸ்டிராக்‌ஷன்ஸ் பல. போலிஸுக்கும் அவன் மனைவிக்கும் டைவர்ஸ் என்று காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படிப் பல.

பல நல்ல நடிகர்கள் வீண். ஜோர்ஜ் பாவம் சும்மா விடாது.

கமலுக்கு வயதாகிவிட்டது. உயிரைக் கொடுத்து நடிக்கிறார், ஆனால் ஒட்டவில்லை. பலவீனமான கதை, சொதப்பலான திரைக்கதையே காரணம்.

https://youtu.be/5dVJSfuRLIc?si=nYaqOZeM1xaAPWcK

வயதான கமல் போதிதருமர் போல இருக்கிறார்.

பௌத்த கோவில் தற்காப்புக் கலை என்றதும் இங்கயுமா என்று ஜெர்க்கானது. அதேதான். மணிரத்னம் ஷங்கர்2வாகி மீண்டும் இந்தியன் 2 வைப் பார்ப்பது போலத் தோன்றிவிட்டது.

மணிரத்னம் போன்ற பொறுப்பான இயக்குநரின் படம் போலவே இல்லை. செக்கச்சிவந்த வானம் கலரில் இருந்து மணிரத்னம் இன்னும் வெளிவரவே இல்லை. அதே கேங்க் வார் எரிச்சல்தான் இதிலும்.

அதிலும் எந்த இடத்திலும் ஹீரோ வருவான், எப்படியும் பிழைப்பான் என்பதெல்லாம் தாங்க முடியவில்லை. முன்பெல்லாம் ரஜினியை கிண்டல் செய்வார்கள். மணிரத்னம் இருந்தும் பழைய ரஜினி படங்களைவிட மோசமான காட்சிகள் இதில்.சக்திவேல் ராயப்பன் என்ன இண்டர்நேஷனல் டானா? நினைத்தால் விமானம், ஹெலிகாப்டர்! அவர் ஏன் நேபாள் போகிறார் என்பதே புரியவில்லை.

நாஸரைக் கொல்லும் காட்சியில் வசனம் அருமை. அதேபோல் வால்பேப்பரில் நாசரின் முகம் நல்ல யோசனை. ஆனால் யோசித்துப் பார்த்தால், அது தவறான காட்சி. அதை எப்படி ஒருவன் வைத்திருப்பான்?

அரதப்பழசான கதை. அதில் கூட பிரச்சினையில்லை. ஆனால் திரைக்கதை படு திராபை. அதிலும் க்ளைமாக்ஸ் பாசமலர் ரேஞ்ச்.

தியேட்டரில் பார்க்க காரணங்கள் – கேமரா, பின்னணி இசை, துல்லியமான ஒலி, முக்கியமாக சிம்பு. படத்தின் ஒரே ப்ளஸ் சிம்பு மட்டுமே.

பின்குறிப்பு: முத்தமழை எந்த வெர்ஷன்னா சண்டை போடறீங்கன்னு எந்த வெர்ஷனையும் இப்படத்தில் வைக்கவில்லை மணிரத்னம்!

– *Haran Prasanna*
– 🎃👹💀

ar rahmankamal hassanMani RatnamThug lifeThug life reviewTrisha
Comments (0)
Add Comment