*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா*
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பேசுகையில்,
”நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் ‘ப்ரண்ட்ஸ்’. ப்ரண்ட்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நட்பு, சிரிப்பு. இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
திரு. ஷானு பேசுகையில், “ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி, மறு வெளியீட்டிற்கான உரிமையை வாங்கினோம். அப்போதே அவர் இந்த திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்த பிறகே அனுமதி வழங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவிடம் இப்படத்தின் புதுப்பிப்பு பணிகளை வழங்கினோம். இந்தப் படத்திற்காக 5.1 – 7.1- டால்பி அட்மாஸ் – என மூன்று வெர்ஷன்களில் ஒலிகளை மாற்றி அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஃபிரேமையும் டி ஐ (DI) செய்து, கலர் கரெக்ஷனையும் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை மீண்டும் வழங்குவதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இந்தப் படத்தை எந்த காலத்தில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.
இந்தப் படத்தை மலையாளத்தில் உள்ளது போல் இல்லாமல் தமிழ் ரீமேக்கில் இரண்டு கதாபாத்திரங்களை இயக்குநர் சித்திக் புதிதாக இணைத்து இருப்பார். அதனால் மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ்’ படத்திற்கும், தமிழில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதிலும் வடிவேலுவின் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். இந்தப் படம் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
இயக்குநர் கௌதம் ராஜ் பேசுகையில், “நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன். தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது. டிரைலரை பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமிக்கதாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் அந்த காலகட்டத்தில் பாசில், சித்திக் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடைய லைட்டிங் குவாலிட்டி ஸ்பெஷலாக இருக்கும்.
இந்தப் படத்தை மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது பல விஷயங்களை நினைவு படுத்தும். அந்த அளவிற்கு இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் மூவி.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் சித்திக் தான் பான் இந்திய இயக்குநர். அவர் ஒரு கதையை மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற வைத்து, அதே கதையுடன் தமிழ், தெலுங்கு ,இந்தி என்று ஒவ்வொரு மொழியிலும் இயக்குவார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு கதையை இயக்குவார். அவரைப் போல் ஒரு ஸ்கிரிப்ட்டை காமெடி வெர்ஷனில் எழுதி இயக்கக்கூடிய இயக்குநர் தற்போது இல்லை.
விஜய்யின் கலை உலக பயணத்தில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் தான் கலெக்ஷன் கிங் ஆக அவரை உயர்த்தியது.
புதுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கியில் தான் நான் இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் ஊரில் இந்த படம் 40 நாட்கள் ஓடியது.
சூர்யாவையும் ஊர் முழுவதும் அறிமுகப்படுத்தி சென்றடைய வைத்த படமும் இந்தப் படம் தான்.
லெஜன்ட் இளையராஜாவின் பாடல்களை இப்போது கேட்டாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது.
இன்று வரை டிரெண்டில் இருக்கும் நேசமணி கதாபாத்திரம் இந்தப் படத்தில் இருக்கிறது. தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் படத்தை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது நிறைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். தற்போதுள்ள இளம் தலைமுறை ரசிகர்கள் இதை ஒதுக்குவார்கள், அதை ஒதுக்குவார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை வழங்கும். இந்தக் குழுவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.
இயக்குநர் கணேஷ் பாபு பேசுகையில், “நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என நிறைய ஹீரோக்கள் உள்ளனர். படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு போட்டி இருக்கும். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குஷால் தாஸ் கார்டன் மற்றும் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தான் நடைபெற்றது. குஷால் தாஸ் கார்டன் என்பது சினிமாவிற்கு கோயில் போன்றது. அவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்,” என்றார்.
இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், “ஆண்பாவம் பொல்லாதது எனும் படத்தை அண்மையில் திரையரங்கம் ஒன்றில் குடும்பத்தினருடன் பார்த்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது அங்கு ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. என் மனைவி இந்த படம் எப்போது வருகிறது, என்று உற்சாகத்துடன் கேட்டார். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது என்று சொன்னேன். அவருடைய உற்சாகம் காரணமாக இந்தப் படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டது.
தற்போது கடந்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தை டெக்னிக்கலாக நல்ல குவாலிட்டியுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நாம் திரையரங்கத்திற்கு செல்லும் போது அதில் ஓடும் படங்கள் காட்சியாகவும், ஓசையாகவும் நல்லதொரு தரமான அனுபவத்தை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள். அது போன்றதொரு முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர் வினோத் ஜெயின் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன்.
நான் கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கி விட்டு தமிழில் இயக்குவதற்காக அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அப்போது அவர் மற்றொரு கதையை சொல்லி இந்த கதையை திரைப்படமாக உருவாக்கலாம் என சொன்னார். அந்த கதை மிகவும் அதிகம் செலவாகுமே என்று சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி, தற்போது ‘கோல்மால் ‘ என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். அதே அளவிற்கான நேரத்தையும், பொருளையும் செலவு செய்து ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை புதுப்பித்திருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தை தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் உயர்வானது,” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆணியே புடுங்க வேணாம்’ எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான்.
இந்தப் படத்தில் நான் பேசும் ‘ஆடு நடந்தது… மாடு நடந்தது..’ என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்.
ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.
ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார்.
இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’ ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது ‘ஐயோ நான் பிடிக்கலடா’ என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள்.
விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில் முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார்.
இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. ‘காதல் கோட்டை’ படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி. அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “ரமேஷ் கண்ணாவை பற்றிய பல ரகசியங்கள் இப்போதுதான் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிக்காமல் பல வேலைகளையும் பார்த்திருக்கிறார். சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவி இருக்கிறார்.
சூர்யா- விஜய் இருவரும் முதலில் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்தார்கள். அதில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இணைபிரியாத நண்பர்கள். இந்தப் படத்தை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்.
விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, சூர்யா நடித்த ‘நந்தா’ என எந்த படத்தை பற்றி பேசினாலும்.. அப்படத்தின் கதை நினைவுக்கு வரும். ஆனால் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை பற்றி பேசும்போது அதன் கதை நினைவுக்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.
என்னை பொருத்தவரை சித்திக் மிகப்பெரும் இயக்குநர். ஆக்ஷன் படத்தை இயக்கலாம், லவ் சப்ஜெக்ட்டை இயக்கலாம், சென்டிமென்ட் படத்தை எடுத்து, மக்களை அழ வைத்துவிடலாம், ஆனால் காமெடி படத்தை இயக்குவது என்பது கடினம். ஏனெனில் காமெடி படத்திற்கு டைமிங் ரொம்ப முக்கியம். ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் காமெடி காட்சிகளில் ஐந்து, ஆறு நடிகர்கள் இருப்பார்கள். அனைவரும் டைமிங் உடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.
இந்தப் படத்தில் யார் ஹீரோ என்று தெரியாது. விஜயா, சூர்யாவா, வடிவேலா, ரமேஷ் கண்ணாவா என தெரியாது. இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
மலையாள இயக்குநர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். திரைக்கதையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே படமாக்குவார்கள். நான் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
இந்தப் படத்திற்குப் பிறகு நேசமணி என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது.
நான் ‘திருப்பாச்சி’ படத்தில் பணியாற்றும்போது விஜய் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து விட்டார். அந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும்போது ஆடு வெட்டும் காட்சியில் பெஞ்சமினை வைத்து தான் கதை சொன்னேன். ஏனெனில் அவர் காமெடியன். அதனால் காட்சியை அப்படி உருவாக்கினேன். படப்பிடிப்புக்கு செல்லும் முன் மீண்டும் விஜயிடம் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அப்போது அவர் தயக்கத்துடன் அந்த ஆடு வெட்டும் காட்சியில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா எனக் கேட்டார். அந்தக் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டதால் அந்த காட்சி அவருக்கு பொருத்தமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் கேட்டவுடன் ‘ஓகே சார் நீங்கள் நடிக்கலாம்’ என்று சொல்லிவிட்டேன். விஜய் இன்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னேறி விட்டாலும் அவருக்குள் ஒரு அற்புதமான காமெடி சென்ஸ் இருக்கிறது. என்னுடைய ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களிலும் முதல் பாதி காமெடியாக தான் இருக்கும்.
ஒரு நடிகருக்கு காமெடி சென்ஸ் இருந்தால் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுவார். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு திரை உலகில் நட்சத்திரமாக வளர முடியும். சூர்யாவும் ‘பிதாமகன்’ படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்.
தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதில் சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலிஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கு இருக்கிறது. தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படம் அமையும். அதனால் இந்தப் படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ, அதே அளவிற்கு இந்த படம் மீண்டும் வெளியாகும் போதும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
***