தயாரிப்பு : ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் :
ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : ஜெய கிருஷ்ணமூர்த்தி
ஒளிப்பதிவு : கா சத்யராஜ்
இசை : என். ஆர். ரகுநந்தன்
எடிட்டர் காசி விஸ்வநாதன்
வெளியீடு : ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.
பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில்
‘குடி குடியை கெடுக்கும்’ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘ஆலகாலம்’.
இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான
ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம்.
விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிரிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஜெய் எனும் மாணவன் சுதந்திரம் குறித்து சுதந்திர தின விழாவில் பேசுகிறான். ஊர்மக்கள் ஜெய்யைப் பாராட்டுகிறார்கள். மகனை எண்ணி தாய் யசோதை மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஊரில் சாராயம் அருந்தி, பலர் இறக்கிறார்கள். அவர்களில் ஜெய்யின் தந்தையும் ஒருவர். இதனால் ஒற்றைப் பெற்றோருடன் வளரும் ஜெய்.. நன்றாகப் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறுகிறான்.
அதன் பிறகு அவனது தாய் யசோதை நகரத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் உயர்கல்வி பெற சேர்க்கிறாள். அத்துடன் அங்குள்ள மாணவர் விடுதியிலும் சேர்கிறாள். விடுதி வாழ்க்கை.. புதிய நண்பர்கள்.. புதிய சூழல்.. ஜெய் மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்தக் கல்லூரியில் ஜெய்யுடன் படிக்கும் தமிழ் ( சாந்தினி ) என்ற பெண்ணிற்கு ஜெய் மீது காதல் ஏற்படுகிறது. அந்தக் காதலைத் தமிழ் ஜெய்யிடம் சொல்ல.. ஜெய் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறான். தமிழைக் காதலிக்கும் அந்த கல்லூரியில் படிக்கும் பணக்கார வாலிபன், ஜெய் மீது தவறான அபிப்பிராயம் உருவாக வேண்டும் என்பதற்காக மது அருந்தாத ஜெய்க்கு தனது நண்பர்களுடன் இணைந்து தந்திரமாக மது அருந்த வைக்கிறான். முதலில் விளையாட்டாக மது அருந்தும் ஜெய்.. பிறகு படிப்படியாக அதற்கு அடிமையாகிறான். அதன் பிறகு மது பழக்கத்திலிருந்து அவன் மீண்டானா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
இதில் கதைநாயகன் ஜெய் பாத்திரத்தில் இயக்குநர்
ஜெய கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.தாய் மீது அளவற்ற பக்தி வைத்திருக்கும் ஜெய்.. கல்லூரியில் படிக்கத் தொடங்கியதும் காதலிப்பது, மது அருந்துவது, நண்பர்களுடன் சண்டை போடுவது, காதலியைக் கல்லூரி வளாகத்தில் வைத்து முத்தமிடுவது, இதனால் ஜெய்யும், தமிழும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவது, ‘மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் உன்னுடைய தாயின் உத்தரவாதம் தேவை’ என கல்லூரி முதல்வர் கண்டிப்புடன் சொல்ல.. தாயிடம் இதனைச் சொல்ல தைரியம் இல்லாததால் ஊருக்குச் செல்லாமல்… தன் காதலி தமிழைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழத் தொடங்குகிறார்… என திரைக்கதை மிக மிக இயல்பாகவும், யதார்த்தமாகவும் பயணிக்கிறது.
நாயகன் ஜெய் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவுடன் ஒரு கட்டத்தில் ஒரு காலையும் இழக்கிறான். அந்நிலையிலும் கூட அவனுடைய மது அருந்த வேண்டும் என்ற வேட்கையின் தீவிரம் குறையவில்லை. மது ஒருவனை எப்படிச் சீரழிக்கும் என்பதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.
ஜெய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர்
ஜெய கிருஷ்ணமூர்த்தி ஒரு அசலான குடிகாரனைத் திரையில் காட்சிப்படுத்தி, குடி குடியை எப்படிக் கெடுக்கிறது என்பதையும்… உறவுகளை எப்படிச் சீரழிக்கிறது என்பதையும்… அற்புதமான நடிப்பால் நேர்த்தியாக உணர்த்தி இருக்கிறார்.
அதிலும் ஒரு கால் இல்லாமல் மதுபானக் கடைக்குத் தவழ்ந்து சென்று மது அருந்த காசில்லாமல் அங்கு குப்பையில் கிடைக்கும் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் கப்புகளிலும் இருக்கும் துளி மதுவை நக்கி நக்கி சுவைப்பது குடியின் தீவிரத்தை.. அதன் கோர முகத்தை.. ரசிகர்களுக்கு எளிதாகக் கடத்துகிறது.
தமிழ் எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சாந்தினி கல்லூரி மாணவியாகவும், காதலியாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும், வெவ்வேறு தோற்றத்தில் திரையில் தோன்றுகிறார். பொருத்தமான தோற்றத்தில் மட்டுமல்ல தனித்துவமான நடிப்பிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
ஜெயின் தாய் யசோதையாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ்,இதில் அடர்த்தியான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். உச்சகட்ட காட்சியில் அதகளப் படுத்துகிறார்.
தன் மகன் குடிக்கு அடிமையாகிக் குடிக்க முடியாமல் சாலையோரத்தில் கிடப்பதைப் பார்த்து.. யசோதை கலங்கித் தவித்துப் போய், அவன் கேட்கும் மதுவை வாங்கித்தர மனமில்லாமல்.. பிறகு மகனுக்காகத் தன் கொள்கையைத் தளர்த்தி மதுபானக் கடைக்குச் சென்று மது வாங்கி வருவதற்குள்.. அவன் உயிர் பிரிகிறது. தன்னுடைய வாழ்க்கை லட்சியமான மகனை மது பிரித்து விட்டதே என்ற தாள முடியாத கோபத்தில் எதிரே இருக்கும் மதுபானக் கடையை அடித்து நொறுக்கி, தீ வைத்து, மது என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தன்னைத் தானே தீ வைத்து எரித்துக் கொள்கிறாள். இது ரசிகர்களின் கண்களை இமைக்க மறந்து உறையச் செய்கிறது.
உச்சகட்ட காட்சியை வித்தியாசமாக அமைத்ததற்காக இயக்குநரைக் கைவலிக்கும் வரை, கரம் குலுக்கிப் பாராட்டலாம்.
இந்தக் காட்சியில் ஈஸ்வரி ராவ் தனது அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுப்பதுடன் எப்படி உறவுகளையும் சீரழிக்கும் என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லி இருக்கும் படைப்புதான் ஆலகாலம்.
மது அருந்தாதவர்கள் அவர்களது நண்பர்கள் மூலமே மது பழக்கத்தை விளையாட்டாகத் தொடங்குகிறார்கள் என்பதையும், அதன் பிறகு மதுவுக்கு அடிமையாகி உறவுகளையும், உடலையும் சீரழித்துக் கொள்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பதால்.. மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. இதுவே இந்தப் படத்தின் வெற்றி என்றும் கூறலாம். ஏனென்றால் இயக்குநர் எதிர்பார்த்தது அதைத்தான்.
ஒளிப்பதிவாளர் கா. சத்யராஜும் இசை யமைப்பாளர் என். ஆர். ரகுநந்தனும் இணையாகச் செயல்பட்டு இயக்குநரின் திரைப்பாதையில் பயணித்துள்ளனர்.அதேபோலகலை இயக்கம், படத்தொகுப்பு எனப் பிற தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழுப் பங்களிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.
விஷத்தைத்தான் ஆலகாலம் என்பார்கள் .மது மெல்லக் கொல்லும் விஷம் என்று கூறும் வகையில் ஒரு திரைப்படத்தைச் சமரசம் இன்றி எடுத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.