1989 முதல் 1992 வரை ஹர்ஷத் மேத்தா நடத்திய பணமோசடி குறித்து பல படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியாகி விட்டன. அதே காலக்கட்டத்தில் நடைபெறும் மோசடி கதையாகவே இந்த படத்தை உருவாக்க நினைத்த இயக்குநர் பாஸ்கர் எனும் வங்கி கேஷியர் கதாபாத்திரத்தை துல்கர் சல்மானுக்கு கொடுத்து க்ரியேட்டிவ் லிபர்டியுடன் புகுந்து விளையாடியுள்ளார். 3 வடபாவ் வாங்கவே சிரமப்படும் கேஷியர் அவரை நம்பி காதலித்து வந்த சுமதி (மீனாட்சி சவுத்ரி) என சாமானிய வாழ்க்கை வாழ்ந்து வரும் நபர் ஒரு கட்டத்தில் மோசடி செய்து எப்படி கோடீஸ்வரர் ஆகிறார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் மற்றும் சிக்கல்கள் வருகின்றன என்பதை ரொம்பவே சுவாரஸ்யமாகவும் போர் அடிக்காமல் சீட்டின் நுனிக்கே சென்றும் பார்க்கும் விதமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.
பாஸ்கராக வரும் துல்கர் சல்மான் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். குடும்ப பொறுப்புகளை சுமக்கும்போது அப்பாவியாக இருக்கும் அவர், ஒரு கட்டத்தில் வாழ்வில் உயரும்போது பணக்கார தோரணைக்கு மாறுவது அடடே சொல்ல வைக்கிறது.
குடும்பத்தை விட்டுக்கொடுக்காத மனைவியாக வரும் மீனாட்சி சௌத்ரி, ‘வடாபாவ்’ காட்சியில் நெகிழ்ச்சியையும், தனது வீட்டில் அம்மாவையே எதிர்க்கிற இடத்தில் கோபத்தையும் அற்புதமாகக் கடத்தியிருக்கிறார். இவருக்கும் துல்கருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதம். நண்பராக நடித்துள்ள ஹைப்பர் ஆதிக்கும், அந்தோணியாக வரும் ராம்கிக்கும் சில பல விசில்கள் பறக்கிற முக்கிய வேடங்கள். மாஸ்டர் ரித்விக் நெகிழ்ச்சியான காட்சியில் குறைசொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார்
விறுவிறுப்புடன், திரைக்கதையை இழுத்துச் சென்ற வகையில், இயக்குனரும், துல்கரும் தனியாக படத்தை சுமந்திருக்கிறார்கள். ஒரு வங்கி அதிகாரி, சக வங்கி அதிகாரிகளின் சூட்சமத்தை முறியடிக்கத் தேவையான அத்தனை விளையாடலும், படத்தில் வரிசை கட்டி வருகிறது. எந்த இடத்திலும், சுவாரஸ்யம் குறையாத அளவிற்கு, காட்சிகளை கடத்தி செல்வதால், லாஜிக் தவறுகள்.
பல படங்களின் சாயல் இந்த படத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஸ்பெஷல் 26,மங்காத்தா போன்ற படங்கள் பாதிப்பு உள்ளது. ஹர்ஷத் மேத்தா,மல்லையா போன்றோர் ஃபிராடுத்தனங்களை கலந்தடித்து படமாக்கி உள்ளார் டைரக்டர். கடைசியில் போலீஸ் வந்து துல்கர் சல்மானை கைது சட்டம் நிலைநாட்டப்படுகிறது என்கிற எம்ஜிஆர் படங்களில் வருவது போல் ஒரு ஷாட் வைத்து டைரக்டர் நல்லது சொல்லி இருக்கலாம். செய்யவில்லை. படம் ரசிக்க தூண்டும் வேளையில் பலரை கெடுக்கவும் தூண்டும்.