டப்பாங்குத்து திரைப்பட விமர்சனம்

கிராமியக்கலையின் பதிவாக வந்திருக்கும் டப்பாங்குத்து !!

தெருக்கூத்தை ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு படைப்பு இந்த ”டப்பாங்குத்து” !!

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி, எஸ்.ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்துவீரா இயக்கத்தில், வெளிவந்திருக்கும் திரைப்படம் ”டப்பாங்குத்து”.

நம் மண்ணில் கலைகள் செழித்து வளர்ந்தது. இயல் இசை நாடகம் எனும் கலைகளில் நாடகத்தின் ஆதி வடிவம் தான் தெருக்கூத்து. நம் மண்ணில் செழித்து வளர்ந்து மக்களை மகிழ்வித்த தெருக்கூத்து கலை, நம் நவீன வாழ்வியல் காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

இந்த தெருக்கூத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கும் படைப்பு தான் டாப்பாங்குத்து.

டப்பாங்குத்து என்பது தெருக்கூத்து கலையின் ஒரு வடிவம், அந்த மனிதர்கள் இந்தக்கலையை எப்படி வளர்த்தார்கள், வாழ்ந்தார்கள் என்பதை பார்க்க ஒரு வாய்ப்பாக இந்தப்படம் அமைந்துள்ளது.

மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள். ஆனால் தர்மலிங்கமா தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறான். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறான், தனத்திற்கு பின்னணி என்ன?ஏன் தர்மலிங்கம் அவளை ஆடக்கூடாது என்று கூறுகிறான்.. தனம் பாண்டியோட மேடை ஏறினாளா? என்பது தான் படத்தின் கதை.

இப்படத்தில் கதையை விட தெருக்கூத்து பாடல்கள் தான் மிக முக்கியம் என படைப்பாளிகள் கருதியிருக்கிறார்கள், முழுப்படத்தையும் பாடல் வழியே சொல்லியிருக்கிறார்கள்.

நீண்ட வருடங்கள் கழித்து அதிக பாடல்கள் கொண்ட படம் இது தான் ஆனால், அந்தப்பாடல்கள் எல்லாமே அருமையாக வந்துள்ளது. தெருக்கூத்து பாடல்கள் எந்த மாதிரி இருக்கும், அதன் அழகு எல்லாத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த கலைஞர்களான பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என நாட்டுப்புற கலைஞர்களின் பட்டிதொட்டி யெங்கும் பட்டய கிளப்பிய பாடல்கள் பலவும் படம் முழுக்க மிக அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கரகாட்டாக்காரனுக்குப் பிறகு அந்த ஜானரில் அதே கமர்ஷியல் அம்சங்களுடன் ஒரு படம் வரவில்லை இந்தப்படம் அந்த ஏக்கத்தை போக்கியுள்ளது.

தெருக்கூத்து கலைஞராக நாயகன் சங்கரபாண்டி படத்தில் மதிச்சியம் பாண்டியனாக வாழ்ந்திருக்கிறார். ஒரு தெருக்கூத்து கலைஞனை கண்முன்னால் கொண்டு வந்துவிட்டார்.

நடிகை தீப்தி புதுமுகம் போலவே இல்லை, ஒரு தமிழ்ப்பெண்ணாக மாறி படமுழுக்க கலக்கியிருக்கிறார். ராசத்தி கதாப்பாத்திரத்தில் வரும் துர்கா இன்னொரு கதாநாயகியாக கலக்கியிருக்கிறார்.

காதல் சுகுமார், படம் தொய்வடையும் போதெல்லாம் தன் நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார். சக்குவாக அவர் நடிப்பு அற்புதம். வில்லனாக வரும் தர்மலிங்கம் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

வெறும் தெருக்கூத்து கலை பதிவாக மட்டுமில்லாமல் ஒரு கமர்ஷியல் படமாகவும் இருக்கவேண்டுமென்பதில் கவனம் வைத்து, படத்தை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் முத்துவீரா. படத்தின் பட்ஜெட் சின்னதாக இருந்தாலும், அதை தெரியவிடாமல் உழைதிருக்கிறார்கள் படக்குழுவினர்.

முழுக்க தெருக்கூத்து தான் எனும் போது, படம் முழுக்க நடனமும் பாட்டும் தான், தீனா மாஸ்டர் நடன அமைப்பு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சரவணனின் இசை படத்திற்கு தூணாக அமைந்துள்ளது.


படத்தில் எந்த டிவிஸ்டும் இல்லை என்பதால், நேர்கோட்டில் பயணிக்கிறது:
திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும். முதல் பாதியில் கதையில் முன்னேற்றம் குறைவாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் தீவிரம் முதல் பாதியில் இல்லை.

இப்படி சின்ன சின்ன குறைகளை இருந்தாலும், தமிழக கலைகளின் ஒரு ஆவணமாக அழுத்தமிகு படைப்பாக வந்திருக்கிறது டப்பாங்குத்து படம்.

dappankuthuDappankuthu movie reviewkollywood newstamil film news
Comments (0)
Add Comment