Take a fresh look at your lifestyle.

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு டி ராஜேந்தர் கண்ணீர் அஞ்சலி

9

சினிமா என்பது மூன்றெழுத்து. ஏவிஎம் என்பது மூன்றெழுத்து. தமிழ் திரை உலகில் தலைசிறந்த நிறுவனமாய் தலையெடுத்து, எண்ணற்ற படமெடுத்து, தமிழ் திரை உலகத்திலே ஒரு ஏற்றமிக்க நிறுவனமாய் நின்று காட்டியதுதான் ஏவிஎம். அந்த ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மறைந்துவிட்ட ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களுடைய புதல்வனும், அவருடைய வாரிசும் ஆகிய ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. நான் பலமுறை ஏவிஎம் சரவணன் ஐயாவை பார்த்திருக்கின்றேன். அவர் அதிர்ந்து பேசியதில்லை. அலட்டிக்கொண்டு பேசியதில்லை. அதிகார தோரணையிலும் பேசியதில்லை. அந்த அளவுக்கு அன்பான மனிதர். பண்பான மனிதர். எப்பொழுது பார்த்தாலும் கைகளை கட்டிக் கொண்டிருப்பார். அந்த அளவுக்கு அவர் பணிவானவர். கனிவானவர். அந்த கனிவான கனி, கண்ணை மூடிவிட்டது என்ற செய்தி, கண்களை கண்ணீரில் நனைக்கிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கையை உள்ளம் நினைக்கிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவரது இல்லத்தாருக்கும், திரை உலகத்தினருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்…

–இப்படிக்கு,
திரைப்பட நடிகர்,
திரைப்பட இயக்குனர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்.

@GovindarajPro