Take a fresh look at your lifestyle.

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

90

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்’. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘விட்னஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பணியை ஏற்றிருக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை நிம்ஸ் மேற்கொண்டிருக்கிறார். சண்டை காட்சிகளை ஜி.என். முருகன் அமைக்க, ஆடை வடிவமைப்பாளராக பிரவீண் ராஜா பணியாற்றியிருக்கிறார். தபஸ் நாயக் ஒலிக்கலவை பணியை கவனிக்க, எஸ். ரகுநாத் வர்மா திரை பிரதியின் வண்ணத்தை மேற்பார்வையிடும் பணியை கையாண்டிருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் திரைப்படத்தின் கருப்பொருளை நுட்பமான விவரங்களுடன் இடம்பெற்றிருப்பதால், பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பிரமோத் சுந்தர் பேசுகையில், ” மூன்றாம் உலகப்போருக்கு பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ‘கலியுகம்’ விவரிக்கிறது. போரின் பின் விளைவுகள் மற்றும் இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கவிருக்கும் இழப்புகள் உள்ளிட்ட பல சமகால நெருக்கடிகளும் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது.” என்றார்.

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து, இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.