Take a fresh look at your lifestyle.

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’

75

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது

சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர். பி ஜி துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். தயாரிப்பு மேலாளர்: ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.