Take a fresh look at your lifestyle.

’ரெட் சாண்டல் வுட்’ விமர்சனம்

96

நடிகர்கள் : வெற்றி, தியா மயூரிக்கா, கேஜிஎப் ராம், எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், லட்சுமி நாராயணன், சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா
இயக்கம் : குரு ராமானுஜம்
தயாரிப்பு : ஜெ.பார்த்தசாரதி

திருப்பதி வனப்பகுதியில் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவ என்று பொய் சொல்லி தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து செல்லும் புரோக்கர்கள், அவர்களை அங்கு செம்மரம் வெட்டுவதற்கு பயன்படுத்துவதோடு, போலீசில் சிக்கினால் அதன் பின்னணியில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக அந்த தொழிலாளிகளை பலிகடாவாக்கிவிடுகிறார்கள். இந்த விசயம் தெரியாமல் திருப்பதிக்கு வேலைக்கு செல்லும் நாயகியின் அண்ணனை தேடி, நாயகன் வெற்றி திருப்பதிக்கு செல்கிறார். ஆனால், அவரை செம்மரம் கடத்தலில் ஈடுபடுபவர் என்று நினைத்து போலீஸ் கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து வைக்க, அங்கு எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தும் போலீஸார், பிறகு அவர்களை என்கவுண்டரில் கொலை செய்ய திட்டமிட, அப்போது நாயகன் வெற்றி உள்ளிட்ட அங்கிருக்கும் அனைவரும் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், அவர்களை விடாமல் துறத்தும் போலீஸ் திட்டமிட்டபடி ஒவ்வொருவரையும் சுட்டுக்கொலை செய்ய, அவர்களிடம் இருந்து நாயகன் வெற்றி தப்பித்தாரா?, இல்லையா, தனது நண்பனை கண்டுபிடித்தாரா?, இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் வெற்றி, தனது ஒவ்வொரு படங்களிலும் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். அதன்படி, இந்த படத்தில் ஆக்‌ஷன், நடிப்பு என இரண்டிலுமே நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.

விவசாயிகளின் அவல நிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவமான நடிப்பினால் அசத்துவதோடு, கண்கலங்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், நாயகியாக நடித்திருக்கும் தியா மயூரிக்கா, மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், இளவரசு, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், சார்லஸ் வினோத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

திருப்பதி வனப்பகுதியின் அழகையும், ஆபத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, இரவு நேர காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

செம்மரம் என்றால் என்ன?, அதற்கு ஏன் இவ்வளவு பெரிய வியாபாரம்?, என்ற விபரங்களை ஆரம்பத்திலேயே சொல்லிவிடும் இயக்குநர்,ஆரம்பம் முதலே கதைக்குள் நம்மை பயணிக்க வைத்துவிடுகிறார்.

செம்மரக்கடத்தல், அதன் பின்னணியில் நடக்கும் அரசியல் போன்றவற்றால் முதல்பாதி படம் சஸ்பென்ஸாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் நாயகன் வில்லனை பழிவாங்க கிளம்புவது, அவனை அழிக்க திட்டம் போடுவது போன்றவை கமர்ஷியலாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றாமல் பயணித்திருக்கிறது.

செம்மரக்கடத்தல் பின்னணியில் இருக்கும் வியாபாரம் மற்றும் அரசியலால் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியாக்கப்படுகிறார்கள் என்பதை மிக தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதை சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் குரு ராமானுஜம்.

ரேட்டிங் 3.5/5