Take a fresh look at your lifestyle.

’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ விமர்சனம்

93

நடிகர்கள் : அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி, துளசி, முரளி சர்மா
இசை : ரதன்
ஒளிப்பதீவு : நிரவ் ஷா
இயக்கம் : மகேஷ் பாபு.பி
தயாரிப்பு : யுவி கிரியேஷன்ஸ் – வம்சி, பிரமோத்

லண்டனில் நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராக பணியாற்றும் அனுஷ்கா, தனது அம்மா – அப்பா பிரிவால் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அம்மாவின் ஆசையால் அவரது கடைசி காலங்களை இந்தியாவில் கழிக்க வேண்டும் என்பதற்காக அம்மாவும் இந்தியா வருகிறார். அப்போது அவரது அம்மா இறந்துவிட, தனது அம்மாவை போல் தனக்கு ஒரு குழந்தை துணை வேண்டும் என்று விரும்புகிறார். அதனால், திருமணம் செய்யாமல் செயற்கை கருத்தரிப்பு மூலம் தாயாக விரும்பும் அவர் செயற்கை கருத்தரிப்பு மையத்தை அனுகிறார்.

ஆனால், அங்கிருக்கும் விந்து கொடையாளிகளை தவிர்த்துவிட்டு, தனக்கு பிடித்தது போல் ஒருவரை தேர்வு செய்து அவருடைய விந்து மூலமாக தாய்மடையடை விரும்பும் அனுஷ்கா, அதற்கான நபரை தேடும் போது நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கிறார். பொறியியல் படித்துவிட்டு ஸ்டண்டப் காமெடியனாக விரும்பும் நவீனை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக அன்ஷ்கா அவருடன் பொய் சொல்லி பழகுகிறார். ஆனால், நவீனுக்கு அனுஷ்கா மீது காதல் மலர, தனது காதலை தெரியப்படுத்த நினைக்கும் போது, அனுஷ்கா தனது தேவையை அவரிடம் சொல்ல, அதற்கு நவீன் சம்மதித்தாரா?, அனுஷ்காவின் விருப்பம் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தாலும், காதல் காட்சிகளோ அல்லது பாடல்களோ எதுவும் இல்லை. ஏன், கதாநாயகனின் கைவிரல் கூட அவர் மீது படாதபடி ஒரு கதாபாத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துடிதுடிப்பான இளைஞராக இருக்கிறார். அனுஷ்கா வயதில் தன்னை விட மூத்தவர் என்பதால், அவர் மீது ஏற்பட்ட காதலை தனது பெற்றோரிடம் வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அனுஷ்காவின் முடிவை வேறு மாதிரியாக புரிந்துக்கொண்டு ரெடியாகும் காட்சியில் திரையரங்கையே கலகலப்பாக்குகிறார்.

அனுஷ்கா – நவீன் பொலிஷெட்டி இருவரை சுற்றி கதை நகர்ந்தாலும், துளசி, முரளி சர்மா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது. லண்டன் காட்சிகள் மட்டும் இன்றி இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளும் கொள்ளை அழகு.

ரதனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவாக இருந்தாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியமானது, அதே சமயம் அந்த துணை கவணராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, என்ற கருத்தை வலியுறுத்தம் கதையை இயக்குநர் மகேஷ் பாபு.பி, காமெடி ஜானரில் இயக்கியிருக்கிறார்.

இந்தியாவில் வாழும் பெண்கள் இதுபோல் சிந்திப்பார்களா? என்ற கேள்வி எழக்கூடாது என்பதால், அனுஷ்காவை லண்டனில் வசிப்பவராக காட்டியிருக்கும் இயக்குநர், பெண்கள் என்றாலே திருமண உறவை சார்ந்து தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதே சமயம், திருமண உறவை வெறுக்கு பெண்கள் தங்களுக்கு துணையாக கணவர் இன்றி குழந்தை பெற்றுக்கொள்ளும் புரட்சிகரமான விசயத்தை சொல்லும் இயக்குநர், அந்த குழந்தை தனது அப்பா எங்கே? என்று கேட்டால் அதற்கு அவர்கள் என்ன சொல்ல வேண்டும், என்பதை எந்த இடத்திலும் சொல்லாவில்லை. இறுதியில் வழக்கமான பாதையில் பயணித்து, இது புரட்சிகரமான விசயம் தான் ஆனால், நம்ம ஊருக்கு ஒத்து வராது என்ற ரீதியில் கதையை நகர்த்தியிருக்கிறார்.

சுவாரஸ்யமான கரு தான் என்றாலும் முதல் பாதி படம் மெதுவாக நகர்வதால் சற்று போரடிப்பது போல் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியை இளைஞர்களை கவரக்கூடிய காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் மகேஷ் பாபு.பி, இறுதியில் வழக்கமான காதல் கதையாக படத்தை முடித்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5