*தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மாமனிதன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்திற்கு நடைபெற்ற நினைவஞ்சலி*
புரட்சி கலைஞர், கேப்டன் என திரையுலகினராலும், ரசிகர்களாலும், பொதுமக்களும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் முப்பது வருடங்களாக வெற்றிப்பயணம் நடத்திய அவர் மக்களுக்கு சேவை செய்ய அரசியலிலும் நுழைந்து அதிலும் நன்மதிப்பை பெற்றார். ஆனால் கடந்த பல வருட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கேப்டன் விஜயகாந்த் கடந்த டிச-28 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
திரையுலகில் பல நல்ல மாற்றங்களுக்கு வித்திட்ட அவர் தான் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டார். அந்த மாபெரும் மனிதரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமாராஜர் அரங்கில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் என நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் கமல், விக்ரம், சரத்குமார், ராதா ரவி, சிவகுமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் பலரும் கேப்டன் விஜயகாந்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
*தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது,*
“விஜயகாந்த் அண்ணன்
எப்போதும் அவர் அணிகின்ற வெள்ளை ஆடையில் ஒரு சின்ன கருப்பு பொட்டு கூட இல்லாமல் மிக உண்மையான உன்னதமான மக்களுக்கான வாழ்வை வாழ்ந்து சென்றுள்ளார். அவரைப் பற்றி நினைக்கும் போது, மிகவும் வெற்றி பெற்ற உச்சகட்ட நட்சத்திரமாக, அதைவிட முக்கியமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக அவரது இரு முகங்களை நான் காண்கின்றேன். முதல் முறையாக அவருடைய தலைமையில் தான் வெகு நாட்கள் கழித்து சினிமா நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல நட்சத்திர கலைவிழாவுக்கு அள்ளிச் சென்றார். அவர் கொடுத்த ஒரு யோசனை ஊக்கம் தைரியம் தான் நம்மாலும் அதை செய்ய முடியும் என்கிற எண்ணம் ஏற்பட காரணம். அதற்கு காலம் முழுவதும் நான் அவருக்கு நன்றி கூறுவேன். இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவருடைய வருகை தான் எங்களுக்கு முக்கியமான மேடை அமைத்து கொடுத்திருக்கிறது” என்றார்.
*நடிகர் சரத்குமார் பேசும்போது,*
“இப்படி ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொள்வோம் என்று வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத தருணம் இது. கேப்டனின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல தமிழ் சமுதாயத்திற்கே மாபெரும் இழப்பு. 1990ல் நான் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த சமயத்தில் தான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். புலன் விசாரணை படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது அவரது அலுவலகத்தில் இயக்குநர், ஆர்.கே செல்வமணி, விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இந்த படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் நான் மீசை எடுத்தால் எப்படி இருப்பேன் என்று அவர்கள் பேசிய பேச்சு அவர்களை அறியாமல் என் காதில் விழுந்தது. உடனடியாக அருகில் இருந்த சலூனுக்கு சென்று மீசையை எடுத்துவிட்டு வந்து இப்படித்தான் இருப்பேன் என அவர்களிடம் கூறினேன். மீசை எடுத்த நாளில் முதன் முதலாக அவரை சந்தித்தேன். தற்போது மீசை எடுத்த பிறகு அவரை சந்திக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. வெளிநாட்டில் இருந்ததால் அவருக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அவரை இழந்துவிட்ட இந்த சூழலில் அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் குணம் என அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். புலன் விசாரணை படத்தில் அவருடன் மோதும் இறுதி சண்டைக் காட்சியில் தொடர்ந்து நான் அவரை அடிக்க வேண்டி இருந்தது. இயக்குநர் செல்வமணியிடம் அவரை இப்படி அடிக்க வேண்டுமா என கேட்டேன். அப்போது விஜயகாந்த் என்னை அழைத்து, சரத் அவர் சொல்வதை செய்யுங்கள் சரியாக இருக்கும் என்று கூறினார். நான் அவரை அந்த அளவிற்கு அடித்தால் தான், திருப்பி அவர் என்னை அடிக்கும் போது அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என்று சொன்னவர் விஜயகாந்த். அந்த காட்சி எடுக்கும் போது எனக்கு அடிபட்டு மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சொன்னார்கள். கேப்டனும் நான் குணமாகி வந்தபின் படப்பிடிப்பு நடத்தலாம் என கூறினார். ஆனால் நான் அன்றைய தினமே சிகிச்சை எடுத்துக் கொண்டு உடனே படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று என்னை கடிந்து கொண்டார். அந்த படம் முடிந்ததும் படத்தின் ஃபர்ஸ்ட் காபி பார்த்துவிட்டு என்னை அழைத்து, சரத் இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பெயர் என்று சொன்ன ஒரு பெருந்தன்மை வேறு எந்த ஒரு கதாநாயகனுக்கும் இருக்க முடியாது. அதேபோல கேப்டன் பிரபாகரன் படம் முடிந்ததும் இந்த படத்தின் மூலம் மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என்றும் என்னிடம் சொன்னார். அந்த மாதிரி குணம் கொண்ட ஒரு மனிதன் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு அடிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன் அந்த சமயத்தில் என்னால் படப்பிடிப்பு நிற்கும் நிலை இருந்தது. இயக்குநர் செல்வமணி முதற்கொண்டு செல்வது அறியாது கையை பிசைந்த சூழ்நிலையில், எனக்காக காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாத போதும், சரத் குணமடைந்து வந்தபின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் அதன்பிறகு தான் படம் வெளியே வரும் என்று சொன்ன மாமனிதர் தான் விஜயகாந்த். நடிகர் சங்கத்தில் அவருடன் ஒரு பொதுச்செயலாளராக இணைந்து பயணித்திருக்கிறேன் அவருடைய நிர்வாகத் திறமை சிறப்பாக இருக்கும். அவர் கோபப்படுவார் என்றாலும் அந்த இடத்தில் குணம் இருக்கும். ஆனால் கோபத்தை மறந்து விட்டு அடுத்த கட்ட வேலையை பார்க்க துவங்கி விடுவார். வடிவேலு கூட இறுதி அஞ்சலிக்கு வரவில்லை என்று சொன்னார்கள் ஆனால் அவர் கேப்டனின் மறைவு கண்டு வீட்டிலேயே கண்கலங்கி அழுதிருக்கலாம். ஏனென்றால் மறப்போம் மன்னிப்போம் என்று குணம் கொண்டவர் விஜயகாந்த். சங்க தலைவராக இருந்தபோது அனைத்து நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து நட்சத்திர கலை விழாவை நடத்திய ஒரு மாபெரும் சக்தி என்றால் அது கேப்டன் தான். நிச்சயமாக இந்த தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி. ஏனென்றால் வள்ளல்களை நாடு மறப்பதில்லை. தமிழ் சமுதாயம் மறப்பதில்லை. நாமும் மறக்க மாட்டோம். கேப்டன் விஜயகாந்த்தை மறக்காமல் அவர் விட்டுச் சென்ற சமுதாய மற்றும் சமூகப் பணிகளை அவருடைய குணத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற இடத்தில் தான் அவர் இருக்கிறார். அவரை எந்த காலத்திலும் மறக்க மாட்டேன்” என்று கூறினார்.
*புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் பேசும்போது,*
“ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய வள்ளல் விஜயகாந்த். பிரதமர் மோடி 2014 முதல் முறையாக பதவி ஏற்ற போது அந்த நிகழ்வில் கேப்டன் விஜயகாந்த் பெயரை மட்டும் தான் உச்சரித்தார். சமீபத்தில் திருச்சியில் பேசும் போது கூட இந்தியா ஒரு கேப்டனை இழந்து விட்டது என்று கூறினார். ஒன்பதாவது வள்ளல் என்றால் அது விஜயகாந்த் தான். ஒரு வார்த்தை கொடுத்து விட்டால் அதிலிருந்து அவர் மாற மாட்டார். அவரது அகராதியில் சமரசம் என்பது இல்லை. அப்படி சமரசம் செய்திருந்தால் அவர் தமிழகத்தின் முதலமைச்சராகவே ஆகி இருப்பார். நக்கீரன் பரம்பரையில் வந்தவர் தான் அவர் என நான் கருதுகின்றேன். அவர் நம் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்” என்று கூறினார்.
*இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி பேசும்போது,*
“சாதாரண திரைப்பட கல்லூரி மாணவனாக இருந்த என்னை உலகம் முழுக்க அறியச் செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத்திற்கு தலைவரான பிறகு சமுதாயத்தில் நடிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்படுத்தி தந்தவர். ஒரு அமைப்பு என்பது சமூகத்திற்கு பயன்படாவிட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தான் விஜயகாந்த் தலைவராக மாறிய பிறகு அவர் தலைமையில் நடைபெற்ற நெய்வேலி போராட்டத்தை இந்தியாவை திரும்பிப் பார்த்தது. அப்போதுதான் நடிகர் சங்கம் என்றால் என்ன என்பது இந்தியாவுக்கே தெரிந்தது. புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க வளாகத்திற்கு புரட்சி கலைஞர் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் கூட ஒரு விண்ணப்பத்தை வைக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் நடிகர் சங்கம் இன்று எவ்வளவு மரியாதையாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அது புகழின் உச்சத்தை தொட்டது என்றால் அது கேப்டனால் மட்டும்தான். அவருடைய பெயரை வைக்கலாமா வேண்டாமா என்று விவாதம் செய்வதையே கூட, அவருக்கு செய்யும் அவமானமாகத்தான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் இல்லாமல் அவர் பெயரை வைக்க வேண்டும். முதல்வர் இரண்டு முறை வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதால் விஜயகாந்த்திற்கு பெருமை இல்லை. தமிழக முதல்வருக்கு தான் பெருமை. பிரதமர் கூட தான் பேசும் மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் பெயரை சொல்லும் அளவிற்கு ஒரு தாக்கத்தை அவரது மரணம் ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல நடிகர் சங்க வளாகத்திற்கு அவரது பெயரை வைப்பதால் விஜயகாந்த்திற்கு புதிதாக புகழ் எதுவும் கிடைக்கப்போவதில்லை. நடிகர் சங்க வளாகத்திற்கு தான் பெயர் கிடைக்கப் போகிறது. நடிகர் சங்க கடனை எப்படி அடைத்தீர்கள் என அவரிடம் நான் கேட்டபோது, அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா எல்லாம் சரத்குமாரிடம் கேட்டுக்கொள். அவர் தான் எல்லாத்தையும் செட்டில் செய்தார் என்று தனக்கு கிடைத்த புகழை கூட விரும்பாதவர் விஜயகாந்த். மகாத்மா காந்தியை கூட பொது இடத்தில் தான் புதைத்தார்கள். ஆனால் தன்னுடைய சொந்த இடத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் அளவிற்கு பொதுச்சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவர் விஜயகாந்த்.
அவரைப் பற்றி ஒரு புத்தகம் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய பிறந்த நாளில் அவர் வாழும் காலத்திலேயே அதை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். துரதிஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. அவர் நினைவுடன் இருந்தபோது, கடைசியாக நான், இயக்குனர் விக்ரமன், ஆர்வி உதயகுமார், பேரரசு உள்ளிட்ட ஐந்து பேர் அவரை சந்தித்தோம். அப்போது புலன் விசாரணையில் எப்படி என் கைகளை இறுக்கி பிடித்தாரோ, அதேபோன்று பிடித்துக்கொண்டார். புலன் விசாரணை படத்தின் படப்பிடிப்பை ஒரு பொருட்காட்சியில் நடத்திக் கொண்டிருந்தபோது அதிகப்படியான கூட்டம் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, போலீசார் என்னை தவறுதலாக அடித்து விடக்கூடாது என்று என்னுடைய கரங்களை இறுக பற்றிக்கொண்டு அடை காத்தவர் விஜயகாந்த். அதேபோல அவரை கடைசியாக சந்தித்தபோது, ஆர்வி உதயகுமார் அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே என்று பாடியபோது எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிய, கேப்டனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அதையும் தாண்டி எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழ வேண்டாம் என எங்கள் கண்ணீரை துடைக்க முற்பட்டார்.
1988 டிசம்பர் 28ஆம் தேதி தான் புலன் விசாரணை படம் பூஜை போட்டு துவங்கப்பட்டது. அவர் மறைந்ததும் அதே போன்று டிசம்பர் 28ஆம் தேதி தான். ஏதோ ஒரு வகையில் எனக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவரை கேப்டன் விஜயகாந்த் என எல்லோரும் சொல்லும்போது அதில் பத்து சதவீதம் பங்கு எனக்கும் இருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறேன். அவருடைய மரணம் தமிழகத்தை பெரிய அளவில் உலுக்கி விட்டது. இதுவரை நான் பார்த்த இது மரணங்களில் இது போன்று நிகழ்விற்கு யார் வரவில்லை என்கிற விஷயத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் கேப்டனின் மறைவுக்கு யாரும் வரவில்லை என்றால் மக்கள் அவர்களை குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு மக்களின் மனநிலை இருந்தது. மக்களுக்கு பயந்தாவது நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்கிற கட்டாயத்தை பொதுமக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அதுதான் கேப்டன் விஜயகாந்தின் பலம். வாழும் வரைக்கும் அவரது பலம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் மறைந்த இன்றும் அவரது நினைவிடத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இதை விட ஒரு நன்றிக்கடனை தமிழக மக்கள் வேறு யாருக்கும் செலுத்தி இருக்க மாட்டார்கள்” என்றார்.
*நடிகர் ராதாரவி பேசும்போது,*
“நானும் விஜயகாந்த்தும் வாகை சந்திரசேகரம் ஒரு படப்பிடிப்பில் தான் சந்தித்தோம். ஒருமுறை நான் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஓடி வந்து கொண்டிருந்தார் விஜி. அப்போது என்னிடம் எனக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டாமா என்று தனக்கு வாய்ப்பு இல்லாததை கூட வெளிப்படையாக கூறிய ஒரு மனிதன் தான் விஜயகாந்த். இவ்வளவு சீக்கிரம் சென்று விடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் விஜயகாந்துக்கும் என்ன சம்பந்தம் ? ஆனால் கடைசி வரைக்கும் நின்றவர். யாராலும் அப்படி நிற்க முடியாது. நானும் சரத்குமார் உள்ளிட்டோரும் நடிகர் சங்கத்துக்காக உழைத்தாலும் கூட அதற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியான நபராக விஜயகாந்த் இருந்தார்.
உழவன் மகன் படத்தில் நடித்தபோது எனக்கு கால் உடைந்து விட்டது. ஆனாலும் விஜயகாந்த்துடன் இறுதிக்காட்சியில் சண்டை போட வேண்டும்.. நின்றபடியே சண்டைபோட்டு அந்த காட்சியை படமாகி முடித்து விட்டோம். ஆனால் இப்ராஹிம் ராவுத்தர் எனக்கு சம்பளம் கொடுக்கும்போது குறைத்து பேசினார். ஆனால் அவரை கடிந்து கொண்ட விஜயகாந்த் உடைந்த காலுடன் இன்று நடித்துக் கொடுத்திருக்கிறான், அவன் கேட்பதை குறைக்காமல் கொடு என்று கூறினார். அந்த அளவுக்கு தாயுள்ளம் கொண்டவர் விஜயகாந்த். அவருக்கு குடும்பம் கூட இரண்டாம் பட்சம் தான்.. இந்த கலை உலகச் சேர்ந்தவர்கள் தான் முதலில்.. அவர்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டார். இனி விஜயகாந்த் கிடைப்பாரா என்றால் தெரியவில்லை. ஆனால் நம்முடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியும்” என்றார்.
*நடிகர் ஜெயம் ரவி பேசும்போது,*
“எல்லோரும் இறந்த பிறகு கடவுளாகி விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில பேர் தான் வாழும்போதே கடவுளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த். நிறைய அனுபவங்கள் அவருடன் எனக்கு இருந்தாலும் அதை நான் எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். பகிர்ந்து கொள்ள கூட எனக்கு தோணவில்லை. ஆனால் அவர் நம்முடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார். நமக்காக எவ்வளவோ விட்டு விட்டு சென்றிருக்கிறார். அவரைப்பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை. ஒரு நடிகராக, அரசியல்வாதியாக அல்ல.. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், மக்கள் அவரை எப்படி தங்கள் மனதில் வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லும் ஒரு சிறு செய்தியாக இடம் பெற்றாலே போதும். அவர் தனது படத்தில் சொன்னது போல சத்ரியனுக்கு சாவு இல்லை என்று தான் நானும் சொல்கிறேன்” என்று பேசினார்.
*நடிகர் கமல்ஹாசன் பேசும்போது,*
“அவரை முதல் நாளில் சந்தித்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதேபோல் தான் பெரிய நட்சத்திரம் ஆன பிறகும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். விஜயராஜ், விஜயகாந்த் இது இரண்டுக்குமே எனக்கு பெரிய வித்தியாசம் தெரியாமல் அவர் பார்த்து கொண்டதற்கு காரணம் நான் அல்ல.. அவர் தான்.. பல விமர்சனங்களை, அவமானங்களை தாங்கி மேலோங்கி வந்தவர். அதற்காக அவர் எந்த காழ்ப்பையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். அவர் நட்சத்திரமாக ஆனார் என்பது அவரது உழைப்பில் வந்தாலும் ஆரம்ப நிலை நடிகர்களுக்கு, கடைநிலை நடிகர்களுக்கு அவர் ஒரு குரலாக இருந்தது அவர்கள் செய்த பாக்கியம்.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு எல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அவர் சேர்த்த சொத்து என்றால் அதுதான். அவர் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. 1998ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பணம் செலுத்தி படிக்க வசதி இல்லாத மூன்று இன்ஜினியரிங் மாணவர்களை பற்றிய செய்தியை கேள்விப்பட்டு அவர்களுக்கான படிப்பு கட்டணம், விடுதி செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த்.. 70-80களில் அந்த சமூக அரசியல் கோபங்களை எல்லாம் பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று அவருடைய நியாயமான கோபம். நியாயத்தைக் கேட்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்து ஆள் போல நாக்கை கடித்துக் கொண்டு துணிச்சலாக கேட்டு விடுவார். அது எந்த அரங்கமாக இருந்தாலும் பயப்பட மாட்டார். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி இங்கே இருக்கும் நடிகர்கள்.
அவர் நடித்த முதல் படமான தூரத்து இடி முழக்கம் ஒரு திரைப்பட விழாவிற்கு செல்ல வேண்டிய ஒரு படம். தொடர்ந்து ஒரு கமர்சியல் ஹீரோவாக அவர் உருவெடுத்தது அவருடைய திறமை. நான் அவருடன் ஒரு படத்தில் சிறிய கெஸ்ட் ரோல்தான் நடித்தேன். அங்கு அவர் எனக்கு காட்டிய மரியாதை, அன்பு இன்றும் மனதில் ரீங்கரிக்கிறது. தனக்கு பிடிக்காதவர்களை கூட கூப்பிட்டு பேசி விடுவார். அந்த தைரியம் அவருக்கு உண்டு. இந்த மாதிரியான செய்கைகளை நாம் பிரதிபலிக்கலாம்.. அவரிடமிருந்து காப்பி அடிக்கலாம். தவறில்லை.. பொதுவாக அவர் போல இல்லை என்று சொல்வது வழக்கம்.. ஆனால் அவர் போல இருக்க வேண்டும் என்று முயற்சியாவது செய்வோம்.. குட்பை விஜயகாந்த். குட்பை கேப்டன்” என்று கூறினார்.
*தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி பேசும்போது,*
“கேப்டன் நடிகராக இருந்தபோது தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிறைய உதவிகளை செய்து ஆதரவாக இருந்துள்ளார். அவரை எங்களது சங்கத்தின் முதல் வாழ்நாள் உறுப்பினராகவே நாங்கள் வைத்துள்ளோம். எங்களது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் கிட்டதட்ட 100 படங்களை தயாரித்து இருக்கிறது என்றால் அதில் 25 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். என் தந்தையின் இயக்கத்தில் நடித்த வேங்கையின் மகன் படத்தில் அவரது தோள்பட்டையில் காயம் பட்டு இருந்த நிலையில் அவரை ஓய்வு எடுக்கச் சொன்னாலும் கூட அதை பொருட்படுத்தாமல் வலியுடன் படப்பிடிப்பை நடத்த உதவினார். ஒரு தயாரிப்பாளர் எந்த விதத்திலும் நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் என்னுடைய தந்தை வெற்றி பெற்றபோது அவருடன் கூடவே உறுதுணையாக நின்றார். நடிகர் சங்கத்திற்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நிறைய நல்லது செய்துள்ளார் அவரை இழந்தது நமக்கெல்லாம் பேரிழப்பு” என்று கூறினார்.
*தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது,*
“1994ல் எங்களது நிறுவனம் தயாரித்த ஹானஸ்ட் ராஜ் என்கிற படத்தில் கேப்டன் நடித்துள்ளார். அவரது நல்ல உள்ளத்தை பார்த்து பலமுறை நான் வியந்திருக்கிறேன். ஹானஸ்ட் ராஜ் படப்பிடிப்பின் போது இரவு நேர காட்சிகள் எடுக்கப்பட வேண்டியிருந்தால் அருகில் இருக்கும் என்னை அழைத்து நீங்கள் போய் தூங்குங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு தயாரிப்பாளர்களின் நலம் கருதும் நடிகராக, ஒரு மனிதராக அவர் இருந்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு 10 நாட்கள் கழித்து ஒரே விமான பயணத்தில் நானும் அவரும் சந்தித்தபோது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா, படம் வாங்கியவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பது தான் என்னிடம் அவர் கேட்ட முதல் கேள்வி” என்று கூறினார்.
*தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசும்போது,*
“நானும் விஜயகாந்த்தும் பயணித்த காலம் பசுமையான காலம். என்னை ஒரு கதாசிரியனாக, பாடல் ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, இசையமைப்பாளராக உருவாக்கியவர் விஜயகாந்த். கூலிக்காரன், வல்லவன், புதுப்பாடகன் என்று வலம் வந்த விஜயகாந்தை நினைக்கும் போது சொல்லொண்ணா எண்ணங்கள் எழுகின்றன. அவரிடம் இருந்த மனிதநேயமும் மக்களுக்கு அவர் பணியாற்றிய விதமும் எந்த சூழல் வந்தாலும் நட்புக்கு துணை நின்று தோள் கொடுக்கும் நட்புணர்வும் ஒருசேர அமைந்த மனிதர். அவரது இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் கூட்டம் போலவே இதற்கு முன்பும் ஒரு முறை மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது. நாங்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் நெய்வேலி போராட்டத்திற்காக சென்றபோது அங்கே சென்றடைய பல மணி நேரங்கள் காலதாமதம் ஏற்பட்டது. காரணம் வழிநெடுக விஜயகாந்த்தை சந்திப்பதற்கும், அவருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்துவதற்கும் தான் அவ்வளவு கூட்டம் திரண்டது.
அதேபோன்ற நிகழ்வுதான் அவரது திருமணத்திற்கும் நடந்தது. அவர் மீது எல்லா காலகட்டத்திலும் மக்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். பத்து வருடங்களாக அவர் உடல் நலம் இல்லாமல் இருந்த சமயத்தில் அவரது துணைவியார் அவரது உடல் நலத்தை பேணி காத்ததுடன் அந்த இயக்கத்தையும் கட்டிக் காத்தார். காலமாக அவர் தந்த கொடையாலும் நட்பாலும் உயர்வாலும் நன்னடத்தையாலும் கவசம் போல காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தை காக்கும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.
*தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா பேசும்போது,*
“கேப்டன் என்னை தயாரிப்பாளராகியவர். அவர்தான் அம்மா கிரியேஷன் நிறுவனத்தை துவங்கி வைத்தார். என் வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாதபடி என்னுடைய எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொண்டவர். வாழ்நாளில் படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம் கூட தாமதமாக வந்து எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாதவர். கடைசி வரை எந்த ஒரு இயக்குனரிடமும் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல் நடித்துக் கொடுத்த ஒரு மாபெரும் நடிகர். அவர் இந்த சினிமாவிற்கு ஒரு நல்ல நடிகராக அறியப்பட்டார் என்பதை விட ஒரு நல்ல மனிதராகத்தான் அறியப்பட்டார். இறுதி வரை நல்ல மனிதர் என்கிற பெயருடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டவர் கேப்டன். நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக தனது ரத்தம் சுண்ட சுண்ட உழைத்ததை நேரில் இருந்து பார்த்தவன் நான். அவரை தவிர வேறு ஒருவர் இதை சாதித்திருக்க முடியாது. அவர் சம்பாதித்த தன்னுடைய சொத்துக்களில் 90 சதவீதத்தை மக்களுக்காகவே கொடுத்தவர். 10 சதவீதத்தை தான் தனது குடும்பத்திற்காக விட்டுச் சென்றுள்ளார். நடிகர் சங்க வளாகத்திற்கு அவரது பெயரை வைக்குமாறு உங்கள் அனைவரிடமும் நன்றாக கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
*நடிகர் வாகை சந்திரசேகர் பேசும்போது,*
“விஜி சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்த காலகட்டத்தில் தான் நானும் சினிமாவிற்காக சென்னை வந்து நாங்கள் இருவரும் நட்பாக பழகும் நாட்கள் தொடங்கியது. வாய்ப்பு கிடைப்பது, நழுவி போவது, போராட்டங்கள், அவமானங்கள், கவலைகள், துக்கங்கள் இவை எல்லாவற்றையுமே நாங்கள் இருவரும் மட்டுமே பகிர்ந்து கொண்ட நாட்கள் உண்டு, இன்னும் சில நண்பர்கள் எங்களுடன் இணைந்தனர், எனக்கும் விஜிக்கும் ஏதோ ஒரு சின்னச்சின்ன பிரச்சினையில் அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வோம். இதை சமாதானம் செய்துபவர் ராதாரவி. சண்டையை இன்னும் தூண்டி விடுபவர் எஸ்.எஸ் சந்திரன். நடிகர் தியாகு ஏதாவது காமெடி செய்து எங்களை சமரசம் செய்வார். இப்படி ஒரு கள்ளம் கபடமற்ற ஆனந்தமான மகிழ்ச்சியான நாட்கள்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் கலைத்துறையில் போய்க் கொண்டிருக்கும்போது விஜிக்கு அந்த பாதையை அமைத்துக் கொடுத்தவர் மதிப்பிற்குரிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன். திரைப்பட கல்லூரி மீதும் அங்கிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை ஏற்பட விஜி ஒரு காரணமாக இருந்தார். அங்கிருந்து வந்த ஆர்.கே செல்வமணி, உதயகுமார் போன்றவர்கள் விஜயகாந்தின் கிரீடத்தில் வைரக்கற்களை பதித்தார்கள். ரஜினி, கமல் என இரண்டு ஜாம்பவான்கள் கொடிகட்டி பறந்த காலத்தில் அதற்குள் நுழைத்து ஜெயித்து வந்தவர் விஜி. அதேபோல அரசியலிலும் ஒரு பக்கம் கலைஞர், இன்னொரு பக்கம் ஜெயலலிதா என்று இருந்த சூழ்நிலையில் உள்ளே நுழைந்து வெற்றி பெற்றவர் தான் விஜி.
எனக்கும் அவருக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இன்று இந்த மேடையில் நிற்கும் வரைக்கும் விஜி எனக்கு ஒரு அருமையான நண்பன். எந்த மண்ணில் இருந்து விஜயகாந்த் சினிமாவுக்காக புறப்பட்டு வந்தபோது பரிசுத்தமாக இருந்தாரோ அவர் மறையும் வரை அதே போன்று பரிசுத்தமாகவே மறைந்துள்ளார். ஒரு முறை பூண்டியில் உள்ள கல்லூரியில் விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது நான் பேசுகையில் திடீரென சச்சரவு ஏற்பட்டு மாணவர்கள் எனக்கு எதிராக திரண்டனர். மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் நாங்கள் அங்கிருந்து வெளியேறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. அப்போது எங்கள் அனைவரையும் அரவணைத்து தன்னுடைய ஒரே காரில் ஏற்றி கல்லூரியின் கேட்டை இடித்துக் கொண்டு வெளியேறி எங்களை காப்பாற்றியவர் விஜயகாந்த். செந்தூரப்பூவே படப்பிடிப்பின் போது நடிகர் செந்திலிடம் சில மீனவர்கள் பிரச்சனை செய்ய விஜயகாந்த் தனி ஒரு ஆளாக நின்று அவர்களை சமாளித்து அடித்து விரட்டினார். நகைச்சுவையிலும் கூட இயல்பான மனிதர். அவர் அரசியல், பொது வாழ்க்கை, திரையுலகம் என அனைத்திலும் சாதித்து விட்டார். இனி அவரது குடும்பத்தினர் அவருடனான மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள்” என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
*இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசும்போது,*
“வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே என்கிற பாடலை அவருக்காகவே நான் எழுதியது போல ஆகிவிட்டது. இந்த பாடலை நான் எழுதும் போது, நிறைய விஷயங்கள் என் மனதில் இருந்தது. ஊமை விழிகள், உழவன் மகன் ஆகிய படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, எனக்கு விதவிதமாக உணவுகளை வரவழைத்து ஊட்டி விட்டவர். அனைவருடனும் சரிசமமாக உண்டு உறங்கி பழகும் ஒரே மனிதர். நான் என்னுடைய முதல் படம் முடித்து ரிலீஸ் ஆக தாமதமான சமயத்தில் தன என்னுடைய திருமண தேதி முடிவானது. கையில் காசு இல்லாமல் தான் ஊருக்கு கிளம்பினேன். கேப்டனுக்கு பத்திரிக்கை கூட வைக்கவில்லை. ஆனால் என் நிலைமை அறிந்த விஜயகாந்த், நண்பர் இப்ராஹிம் ராவுத்தரிடம் சொல்லி என்னுடைய ஊருக்கே 5 கார்களை அனுப்பி அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வைத்தார். அதன்பிறகு சென்னையில் என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக முதல் இருக்கையில் அமர்ந்திருந்தார் விஜயகாந்த். நான் ஒன்றும் பெரிய இயக்குனர் இல்லை.. ஒரு உதவி இயக்குனராக இருந்தவன் தான்.. உதவி இயக்குனர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த ஒரு நடிகர் திரை உலகிலேயே விஜயகாந்த் மட்டும் தான்.
நான் அவரை வைத்து ஒரு படம் பண்ணினாலும் அவரை இமயத்தில் தூக்கி வைக்கும் விதமாகத்தான் படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். அவர் என்னுடைய இயக்கத்தில் நடித்தபோது கதையை கூட கேட்கவில்லை. எங்கள் படப்பிடிப்பின் போது இரவு நேரத்தில் கோவையில் பரதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து தூங்காமலேயே பொள்ளாச்சிக்கு பயணித்து காலையில் எங்களை எழுப்பி சின்ன கவுண்டர் படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வார். இரவு முழுவதும் தூங்காமல் அவரது கண்கள் சிவந்து இருக்கும். ஆனால் எங்களது சின்ன கவுண்டரின் கண்கள் வெள்ளை வெளேரென்று என்று சாந்த சொரூபியாக வேண்டுமே என்பதால் அவரை சில மணி நேரங்கள் தூங்க செய்து பின்னர் படப்பிடிப்பை நடத்தினோம்.
கொஞ்சம் கூட யாரிடமும் ஈகோ இல்லாதவர். அதனால் தான் அவருக்கு இந்த அளவிற்கு தானாக சேர்ந்தது கூட்டம். நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் ஈகோ இல்லாமல் ஒன்று சேர்ந்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். இன்று இவரது முயற்சியால் தான் நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருக்கிறீர்கள். ஒரு ஆன்மா மீண்டும் உங்களை ஒன்று சேர்க்க துடிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சினிமாகாரனாக இருந்தாலும் மனிதநேயத்துடன் இருங்கள் என்று அண்ணன் விஜயகாந்த் சொன்னதை நிறைவேற்றுவோம்” என்று கூறினார்.
*தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் பேசும்போது,*
“நான் சினிமாவில் நடிகனாவதற்கு முன்பிருந்தே கடந்த 37 வருடங்களாக கேப்டனுடன் இணைந்து பயணித்துள்ளேன். அவரது நெய்வேலி போராட்டம், சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி என அனைத்திலும் உடன் இருந்துள்ளேன், நடிகர் சங்கத்தில் அவர் தலைவராக இருந்த போது தான் உறுப்பினராக இணைந்தேன். அவருடன் சுதேசி என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற போது அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் கொடுத்தார். எந்த படம் வந்தாலும் நடி.. இதில் தான் நடிப்பேன், அதில் நடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லாதே. வடிவேலுவை பார்த்தாயா ? எல்லா படத்திலும் நடிக்கிறார் இல்லையா ? அப்படி பல படங்களில் நடித்தால்தான் உனக்கென ஒரு படம் ஒர்க் அவுட் ஆகும். அப்போது உனக்கென ஒரு கேரியர் உருவாகும் என்று கூறினார்.
அவரது திரையுலக வாழ்க்கையில் எத்தனையோ நடிகர்களை பார்த்திருப்பார். ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களை உற்று நோக்கி அவனை ஊக்கப்படுத்தி நீ வளர வேண்டும் என சொல்லும் அந்த நல்ல மனசு தான் விஜயகாந்த். எனக்கும் அவருக்கும் மனம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பொதுவாக எண்ணம்போல் வாழ்க்கை என்று சொல்வார்கள். யாராக இருந்தாலும் நல்ல எண்ணத்துடன் வாழ்ந்தால் இவரை போல நமக்கும் ஒரு இடம் மக்களிடத்தில் கிடைக்கும். இந்த திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர், மிகப்பெரிய ஹீரோயின், முன்னணி காமெடியன், மிகப்பெரிய இசையமைப்பாளர் என யாரையும் எதிர்பார்க்காமல் தன்னை மட்டுமே நம்பி சாதித்தவர் விஜயகாந்த். அந்த வகையில் நான் பார்த்த நடிகர்களில் உண்மையான சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது என் அண்ணன் விஜயகாந்த் மட்டும்தான்” என்று கூறினார்.
*நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது,*
“1984ல் நான் திரைப்படக் கல்லூரியில் மாணவராக இருந்தேன். என்னை பார்ப்பதற்காக நடிகர் சிவராஜ்குமார் அப்போது வருவார். அவரை பார்ப்பதற்கு விஜயகாந்த் விரும்புவார். அப்போது என்னை அவரிடம் திரைப்பட கல்லூரி மாணவர் என அறிமுகப்படுத்தினார்கள். என் மூலமாகத்தான் திரைப்பட கல்லூரி குறித்த ஒரு அறிமுகம் விஜயகாந்துக்கு கிடைத்தது. அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். சங்கத்திற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என கிட்டத்தட்ட அவரை கடத்திக் கொண்டு சென்று தான் பொறுப்பேற்க வைத்தோம். அவர் விரும்பாமல் தான் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் இந்த நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைவருக்கும் விரும்பியதை செய்த ஒரு நடிகர் என்றால் சொன்னால் இவரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது” என்று கூறினார்.
*நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது,*
“விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் செயற்குழு உறுப்பினராக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த சமயத்தில் என்னிடம் சங்கத்தின் பத்திரத்தை எல்லாம் காண்பித்துள்ளார். இப்போது நடிகர் சங்க கட்டடத்தை கடன் வாங்கி கட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றது போல அனைத்து நடிகர்களையும் அழைத்து விருந்தளித்து உபசரித்து மொய் விருந்து போன்று வைத்து பணம் வசூலிப்போம். அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அளிக்கட்டும். கேப்டன் இருந்தபோது நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் இருந்தது. ஆட்சியாளர்கள் கூட பயந்தனர். இல்லாவிட்டால் ஒரு ராமேஸ்வரம் போராட்டத்தை நடத்திக் காட்டி இருக்க முடியுமா ? நெய்வேலி போராட்டத்தை மறக்க முடியுமா ? விஷால், நாசர் உங்களுக்கு சக்தி இருக்கிறது. இனி நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. கேப்டன் வளாகத்தில் வருடம் தோறும் கேப்டன் பெயரில் பொங்கல் விழா நடத்த வேண்டும்” என்று கூறினார்.
*தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி பேசும்போது,*
“கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எவ்வளவோ பேரை அவர் வளர்த்து விட்டுள்ளார். அவருடன் பணியாற்றியவர்கள் அவருடைய குணாதிசயங்களை பற்றி சொல்ல சொல்ல கேட்கவே மலைப்பாக இருக்கிறது. வரலாற்றில் தான் இது போன்ற மக்கள் இருப்பார்கள் என படித்துள்ளோம். அப்படி உண்மையாகவே நம்முடன் வாழ்ந்த ஒருத்தர் கேப்டன் என நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அவர் இருந்த தமிழ் சினிமாவில் நாமும் இருக்கிறோம் என்பதே ரொம்ப பெருமையாக இருக்கிறது. நடிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என அவர் வாழ்ந்து காட்டியது போல் இனிமேல் நாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் அவரை மனதில் நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
ஒரு மனிதன் முற்றிலும் அன்புடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் பணத்தின் மீது பெரிய ஆசை இல்லாமல் நல்லவனாகவே இருந்தால் இந்த சமுதாயம் மதிக்குமா என்றால் மதிக்காது என்று தான் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால் அப்படி ஒருத்தர் இருந்தால் மக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை அவர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றுள்ளார். மறுபடியும் மனிதன் மீதும் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை வருவது இதனால் தான். இப்படி வாழ்ந்தால் இப்படி மரியாதை கிடைக்கும் என எடுத்துக்காட்டி சென்றுள்ளார்.
கேப்டனின் நிர்வாக திறமை பற்றி நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். நாங்கள் எல்லாம் புதிதாக அனுபவம் இல்லாமல் வந்து ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தும் போதும் அதில் வருபவர்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது கேப்டனுடன் பயணித்தவர்கள் அவருடைய செயல்பாடுகள் குறித்து கூறும்போது அதை முன்னுதாரணமாக வைத்து இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என அடுத்தடுத்து முயற்சி எடுத்து வருகிறோம். எங்களுக்கெல்லாம் ஒரு பென்ச் மார்க்கை உருவாக்கி வைத்து விட்டார் கேப்டன். அதை நாங்கள் சந்திப்பதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பது மட்டும் எங்களுக்கு தெரிகிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து அன்பாக பேசுவதே அவருடைய ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன். அவருடைய ஆசிர்வாதத்தால் நடிகர் சங்க கட்டடம் விரைவில் முடிய வேண்டும் என விரும்புகிறேன். அவரது நினைவுகளை இங்கே அமர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அவர் இறந்த சமயத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவருமே கலந்துகொள்ள முடியவில்லை என்பதில் மிகப்பெரிய வருத்தம். அந்த வருத்தத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆற்றிக் கொள்கிறோம். எல்லோரும் சொன்னது போல கேப்டனின் இரண்டு பிள்ளைகளும் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறோம். மக்களுடைய ஆசிர்வாதம் உங்கள் இருவருக்குமே இருக்கும்” என்று கூறினார்.
*நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது,*
“1984ல் அண்ணன் ராதாரவியின் தந்தை எம்.ஆர் ராதா அவர்களின் சிலை திறப்பு விழா அவரது சொந்த ஊரில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற போது கேப்டன் உள்ளிட்டருடன் ஒரு சினிமா பட்டாளமே அங்கே சென்று கலந்து கொண்டோம். அந்த சமயத்தில் கலைஞர் வந்து செல்வதற்குள் மிகப்பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் விஜயகாந்த் வேட்டியை மடித்துக்கொண்டு அனைத்தையும் சமாளித்து அந்த நிகழ்வை திறம்பட நடத்த உதவினார். போராளிக்கு மறைவு இல்லை என்று கலைஞர் சொல்வார். அதேபோலத்தான் நம் கேப்டன் பிரபாகரனுக்கும் மறைவு இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.
ஒரு முறை அவரது படப்பிடிப்பின் போது கர்நாடகா பகுதியில் சில நபர்கள் நடிகைகள் சிலரிடம் தவறாக நடக்க, அந்த படத்தில் துணை மேக்கப் மேனாக பணியாற்றிய சண்முகம் என்பவர் அவர்களை அடித்து விரட்டினார். அதன்பிறகு இன்னும் சிலர் கூடி மிகப்பெரிய பிரச்சனை ஆனபோது விஜயகாந்த் தலைமையில் படக்குழுவினர் களம் இறங்கி அவர்களை விரட்டி அடித்தனர். ஆனால் சண்முகம் காரணமாகத்தான் பிரச்சனை ஏற்பட்டது என அவரை அந்த படத்தில் இருந்து நீக்க சொன்னார் தயாரிப்பாளர். இந்த தகவல் விஜயகாந்த்திற்கு சென்றதும் நான் செய்ய வேண்டிய வேலையைத்தான் முதல் ஆளாக சண்முகம் செய்திருக்கிறார்.. அவர் நாளை இந்த படப்பிடிப்பில் இல்லை என்றால் நான் இந்த கலந்து கொள்ளப்போவது இல்லை என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதன் பிறகு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் அமர்ந்திருந்த சண்முகத்தை அழைத்து வந்தனர். அப்படி எப்போதுமே தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்திற்காக விஜயகாந்த் குரல் கொடுத்திருக்கிறார். இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டது போல கேப்டனின் பெயரை நடிகர் சங்க வளாகத்திற்கு வைப்பது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் அனைவருடனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்” என்றார்.
*நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது,*
“உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே கேப்டனுடன் நெருங்கி பழகி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவருக்காக ஒரு கதை தயார் செய்து அவரிடம் சொன்னபோது ராவுத்தரை போய் பார் என்றார். ராவுத்தருக்கும் கதை பிடித்து விட்டது. உங்களிடமும் கதை சொல்கிறேன் என்றபோது அதெல்லாம் வேண்டாம் உன்னுடைய வேலை, திறமையை நான் பார்த்திருக்கிறேன். போய் படத்திற்கான வேலைகளை ஆரம்பி என்று என்னை முதன்முதலாக இயக்குனராக மாற்றியவரே விஜயகாந்த் தான். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை தொடங்க முடியவில்லை. பின்னர் அதே கதை தான் சூர்யா நடிக்க ஆதவன் என்கிற படமாக வெளியானது. கஜேந்திரா படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் கட்சி ஆரம்பித்த அந்த சமயத்தில் நானும் அவரது கட்சியில் சேர்ந்து கொள்கிறேன் என கூறினேன். அப்போது அவர் நீ என்னுடைய கட்சியில் இணைந்து கொண்டால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவாளர்கள் உன்னை அவர்களது படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்கள். நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாய். உன் தொழிலை நீ கெடுத்துக் கொள்ளாதே” என்று அறிவுரை சொன்னார்” என்று கூறினார்.
*நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது,*
“சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில் வாழும் ஒரு மனிதனாக, இந்த கலைத்துறையில் ஒரு மேதாவி கேப்டன் விஜயகாந்த் நடித்த அதே கலைத்துறையில் ஒரு நடிகனாக, அவருடைய ரசிகனாக, அவர் இயங்கிக் கொண்டிருந்த இந்த நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, ஒரு பொதுச் செயலாளராக தேமுதிகவிற்கு வாக்களித்த ஒரு வாக்காளராக எல்லா வகையிலும் இங்கு வந்தவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் சொல்வது போல ஒருவர் இறந்த பின்பு தான் அவரை சாமி என்று சொல்வார்கள். வாழும்போதே சில மனிதர்கள் தான் அப்படி பெயர் வாங்குவார்கள். அப்படிப்பட்டவர் தான் நம் கேப்டன்.
படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் சரிசமமான சாப்பாடு கிடைக்க வேண்டும் என எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தியவர். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் நாங்களும் இப்போது முயற்சி செய்து வருகிறோம். விஜயகாந்த் அண்ணன் மறைவின் போது, நாங்களும் கூட இருந்து மரியாதை செலுத்தி இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நானும் கார்த்தியும் ஊரில் இல்லை. முதலில் அந்த குடும்பத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சண்முகபாண்டியனிடம் நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. கேப்டன் வளர்ந்து வந்த பல நடிகர்களுக்கு ஒரு தூணாக நின்று அவர்களை வளர்த்து விட்டார். உங்க வீட்டுப் பிள்ளையாக நான் சொல்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் நீயும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை உனக்கு இருந்தால், நான் வருகிறேன்.. எப்படி கேப்டன் அண்ணன் பலருக்கு துணையாக நின்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்தாரோ அதேபோன்று என்னை நீ பயன்படுத்திக் கொள்வதற்கு ஆசையாக இருந்தால் நான் இருக்கிறேன் உனக்காக.. நீயும் இதே போன்று ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்பது எனது ஆசை. அதை நான் ஒரு பரிகாரமாகவே நினைத்துக் கொள்கிறேன்.
அவரை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தோன்றும் ஒரே விஷயம் அவரது தைரியம். எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மனதில் இருந்து தான் பேசுவார். நான் அவரை நேரில் சந்தித்தபோது அருகில் இருந்த பிரேமலதா அம்மா, நடிகர் சங்க பத்திரத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது தன்னுடைய நகைகளை எல்லாம் பீரோவில் இருந்து எடுக்க செய்துவிட்டு அந்த பத்திரத்தை பொக்கிஷமாக அதில் வைத்து பாதுகாத்தார் கேப்டன்.. அந்த அளவிற்கு சங்கத்தின் மீது ரொம்பவே ஈடுபாட்டுடன் இருந்தார் என்று கூறினார்.
அனைவரும் சொல்வது போன்று இந்த தமிழ்நாட்டில் ஒரு தலைவனை நாம் அனைவரும் மிஸ் பண்ணுகிறோம். சினிமாவில் ஈகோ இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆனால் அப்படி ஈகோ இல்லமால் இருந்த ஒருவர்தான் விஜயகாந்த். 54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலகநாயகன் விஜயகாந்த் தான். 54 வீடுகளில் விளக்கேற்றியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். வேறு எந்த நடிகருக்கும் இந்த தைரியம் வராது. இயக்குனராக வேண்டும் என நினைத்தபோது, திரைப்பட கல்லூரியில் சேர வேண்டும் என்கிற ஆசை வந்ததும், இயக்குநர் ஆர்கே செல்வமணியிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற எண்ணம் வந்ததற்கும் காரணம் கேப்டன் தான். எங்களைப் போன்ற நடிகர்கள் மீது புகார்கள் இருக்கும்.. ஆனால் எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாத நடிகர் விஜயகாந்த் ஒருவர் தான்” என்று கூறினார்.
*கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் பேசும்போது,*
“நான் முதல்முறையாக சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் தனத்தை என்ன சொன்னார் என்றால், எல்லோரும் வருவதற்கு முன்பே 6 மணிக்கு முதல் ஷாட் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே அங்கே இருக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் தயாரிப்பாளர் நம்மால் நஷ்டமடைய கூடாது அதேபோல இயக்குனருக்கும் பக்கபலமாக இருந்து வேலைகளை முடிக்க வேண்டும் சொல்லி இருக்கிறார், அவர் சொன்னதை முடிந்த அளவு நான் கடைபிடித்து கொண்டு இருக்கிறேன். அதேபோல சனி ஞாயிறுகளில் எங்கள் வீடு தேடி வந்து அப்பாவை சந்திக்கும் நபர்கள் அனைவருக்கும் எங்களையும் உணவளிக்க சொல்லி ஆரம்பத்தில் இருந்தே வளர்த்தார். அதையே தான் இப்போதும் செய்து வருகிறோம். இனியும் தொடர்ந்து செய்வோம். அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சகாப்தம். அவரது இறுதி ஊர்வலத்திற்காக திரண்ட மக்களை பார்க்கும்போதே அது தெரிந்திருக்கும். அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு சிறப்பான நிகழ்ச்சி.. காரணம் அப்பாவை பொறுத்தவரை எல்லாமே சினிமா தான்.. வீடு, நடிகர் சங்கம், படப்பிடிப்பு என மாறிமாறி சுழன்றவர். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
*கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசும்போது,*
“சிறுவயதில் இருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்ததை விட என் தந்தையின் முகத்தைத்தான் அதிக முறை பார்த்துக் கொண்டிருப்பேன். இதுவரை நானும் என் தம்பியும் எந்த ஒரு நடிகர் சங்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை. இதுதான் முதன்முறையாக கலந்து கொள்ளும் நிகழ்வு. அது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. எங்கள் தந்தையின் கனவை நிச்சயமாக நானும் சண்முக பாண்டியனும் நிறைவேற்றுவோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன், கடந்த பத்து வருடங்களாக அவர் மிகுந்த உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு இருந்த வில் பவர் காரணமாக அனைத்தையும் தாங்கினார். வேறு ஒரு நபராக இருந்திருந்தால் நிச்சயமாக இதை தாங்கி இருக்க முடியாது. அவர் இறக்கும் முன்பு வரை கூட நல்ல நினைவாற்றலுடன் தான் இருந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட எங்கள் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து யூடியூப்பில் அவர் நடித்த படங்களின் பாடல்களை போடச்சொல்லி கேட்டுக் கொண்டுதான் இருந்தார். சிசிடிவி கேமராவில் பார்க்கும்போது அவர் தாளம் போட்டு அந்த பாடல்களை என்ஜாய் பண்ணி கேட்டு கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதேபோல கேப்டனின் இறுதி அஞ்சலியில் நிறைய பேர் வந்திருக்கலாம். சில பேரால் வர முடியாமல் போய் இருக்கலாம். இதில் யாரையுமே நாங்கள் தவறாக நினைக்கவில்லை. அவர்கள் மீது வருத்தமும் இல்லை.. கேப்டனுக்கும் யார் மீது எந்த வருத்தமும் இல்லை” என்று கூறினார்.
*நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தியவர்கள்.*
*Office bearers*
Nasser
Vishal
Karthi
Poochi murugan
Karunaas
*Ec members*
Latha sethupathy
Kovai sarala
Rajesh
Ajay rathinam
Pasupathy
Vignesh
Sonia
Ramana
Thalapathi Dinesh
Saravanan
Premkumar
Sriman
Prakash
Vasudevan
Hemachandran
Kalimuthu
*Nominated Ec members*
1.kalilullah
2.lalitha Kumari
Soundararajan
Anand.k.m.v
Muthu krishnan
Sabitha
Singaravel
Namakkal J.anand
Diana vishalini
Anandha narayanan
*நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள்*
Kamalhassan
Vikram
Sarath Kumar
Sivakumar
Sathyaraj
Rahman
Jayamravi
Vijay Antony
Yogi Babu
A.C.Shanmugam
Radha Ravi
Kalaipuli S.Thanu
Rithvika
Ammu
M.S.baskar
Cell murugan
Vaagai chandrasekhar
Radha
Raj Kiran
Ponvannan
Sharanya ponvannan
Comedy actor Sathish
Karunakaran
Kottachi
Vadivukarasi
R.V.Udhaya Kumar
John kokain
S.ve.sekar
S.N.Parvathy
Simran
Ravi mariya
Y gee mahendran
Chinni jayanth
Vaiyapuri
Suresh chakravarthy
Raja (kadalora kavidhai)
Vichu
Mansoor alikhan
Rithvika
R k selvamani
Perarasu
Ambiga
T.Thiyagarajan
5 Star kathiresan
Thenandal murali
Hari Kumar
T.siva
Abi Saravanan
Meesai Rajendran
Gayathri raguram
Chithra lakshmanan
Lollu sabha Jeeva
Aadhav kannadhasan
Parthepan
S.P.Muthuraman
Jaya Prakash
Aswin kaakamunu
Ashok
Rekha
Anandh Raj
John Vijay
Devayani
Kaali venkat
Bala Saravanan
Redin Kingsley
Master Mahendran
Kumki aswin