*வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது!*
தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10-12 ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. இதற்கு முன்பு நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம். ஆக்ஷன் காட்சிகளை ‘ஜவான்’, ‘சிட்டாடல்’ புகழ் யானிக் பென் கோரியோகிராஃப் செய்திருக்கிறார். கிளாஸி ஆக்ஷன் படமாக வந்திருக்கிறது. ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ என என்னுடைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் வேறொரு ஜானரில் என்னை தகவமைத்துக் கொண்டேன். அதுபோல, இந்தப் படமும் முற்றிலும் எனக்கு வேறொரு ஜானர். கொலையாளிகள், கேங்க்ஸ்டரிடம் இருந்து எப்படி கதாநாயகியை இமைப் போல ஜோஷ்வா காப்பாற்றுகிறான் என முழுக்க முழுக்க ஆக்ஷனில் வடிவமைத்துள்ளோம். இந்தப் படம் மூலம் என்னால் முழுக்க ஆக்ஷன் படத்தைக் கையாள முடியும் எனத் தெரிந்து கொண்டேன்” என்றார்.