







மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மம்மூட்டி, மலையாளம் மட்டுமில்லாமல் தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வந்தே பாரதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். என்னதான் மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தென்னிந்தியா சினிமாவில் மிகுந்த பிரபலமானவர். கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஜோதிகாவுடன் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்மூட்டி. இந்நிலையில் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் நேற்று காலமானார். 93 வயதான பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தொடர்பான கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது. மேலும், மம்மூட்டி தாயாரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாத்திமா இஸ்மாயிலின் உடல் அவர்களின் சொந்த ஊரான செம்புவில் உள்ள மசூதியில் நேற்று நல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் மம்மூட்டியின் தாயார் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” அன்புள்ள தோழன் மம்மூட்டி உங்களின் தாயார் மறைவு விசயம் கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்களின் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் சென்றுயிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.