Take a fresh look at your lifestyle.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: கடைசி நேரத்தில் மலர்ந்த கொல்கத்தா!

711

ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு இருவரும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற நிலையில், மிடில் ஓவர்களில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல் போன்றவர்கள் சிறப்பாகப் பந்து வீசியதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக் கொண்டு சென்ற சென்னை அணியின் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி நோக்கிக் கூட்டிச் சென்றனர். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்கள். 12.1 ஓவரில் கமலேஷ் நாகர்கோடி வீசிய பந்தில் அம்பத்தி ராயுடு (30) ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரில் சுனில் நரைன் வீசிய பந்தில் வாட்சன் (50) அவுட் ஆனார். நான்காவது வரிசையில் களமிறங்கிய மகேந்திரசிங் தோனி 11 ரன்கள் மட்டும் எடுத்து வருண் சக்கரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவ்வளவுதான், வெற்றி முகத்தில் இருந்த சென்னை அணி, தோல்வியை நோக்கி நகர ஆரம்பித்தது. கேதர் ஜாதவ் வழக்கம்போல் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களை வெகுமதியாகப் பெற்றுள்ளார்.

சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 99/1 என இருந்த நிலையில், 17.1 ஓவர்களில் 129/5 என்ற பரிதாப நிலைக்கு சென்றது. 30 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி, வெற்றி வாய்ப்பை இழந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள், கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களை வியூகம் அமைத்து வீழ்த்தினர். ஆஃப் திசையில் ஷார்டாக பந்து வீசி, பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

அவ்வப்போது யார்க்கர், வேகம் குறைந்த பந்துகளை ஆயுதமாகப் பயன்படுத்தி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காணச் செய்தனர். 14ஆவது ஓவரில், சாம் கரன் வீசிய ஷார்ட் பாலை அதிரடி ஆட்டக்காரர் இயான் மோர்கன் தூக்கியடிக்க முற்பட்டு தோனியிடும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு ஓவர்கள் கடந்தபின்பு, சார்துல் தாகூரும் ஷார்ட் பாலை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆண்ட்ரே ரஸலை வீழ்த்தினார்.

இதனால், கொல்கத்தா அணி கடைசி 5 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டுவைன் பிராவோ மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக எட்டாவது வரிசையில் களம் கண்டு 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால், சென்னை அணிக்கு எதிராகத் துவக்க வீரராகக் களம் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதிரடியாக விளையாடிய அவர், ஷார்ட் பிட்ச், ஆஃப் திசையில் வீசப்பட்ட பந்துகளை துல்லியமாக எதிர்கொண்டார். கொல்கத்தா அணி 200 ரன்களை கடக்க வாய்ப்பிருக்கும் எனக் கருதும் அளவிற்குச் சிறப்பாக பேட்டிங் செய்தார். மொத்தம் 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்துத் துவக்க வீரருக்கான இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டார்.