Take a fresh look at your lifestyle.

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “புரடக்‌ஷன் நம்பர் 2” கோலாகல துவக்கம் !

270

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். தற்போதைய நிலையில் “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது.

படம் குறித்து காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D. விஜய்குமரன் கூறியதாவது….

படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான காமெடி கலக்கலாக, தியேட்டரில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதை அடித்து கூறுவதாக இருக்கிறது. இயக்குநர் S.எழில் பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். விநியோக தளத்தில் பெரிய அளவில் அவர் கொண்டாப்பட அதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தமிழின் தலைசிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையில் முதன்முறையாக தனது திரைப்பயணத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தபடத்தை இயக்குகிறார் இயக்குநர் S. எழில் ஒரு தயாரிப்பாளராக பெரு மகிழ்ச்சியுடனும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடனும் உள்ளேன். அதிலும் தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது, உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும். அவர்களின் பலம் படத்தை பெரு வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன். இயக்குநராக கதை சொல்லி ரசிகர்களை ஈர்க்கும் விதத்தை தாண்டி, படத்தை ஒரே கட்டமாக படமாக்குவதில் வல்லவராக இயக்குநர் S.எழில் இருப்பது எந்த தயாரிப்பாளருக்கும் பெரிய வரம். படத்தை சுற்றி நிறைய அன்பும் நேர்மறைதன்மையும் சூழ்ந்துள்ள நிலையில் படத்தின் இறுதி வடிவத்தை காண பெரும் ஆவலாக உள்ளேன்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் தாண்டி மேலும் பல முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்குபெறவுள்ளார்கள். பெரும் நட்சத்திர கூட்டம் அலங்கரிக்க, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் இருக்கும். இப்படத்தை இயக்குநர் S.எழில் திரைக்கதை எழுதி இயக்குகிறார். பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமார் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். C.முருகேஷ் பாபு இப்படத்தின் வசனமெழுதியுள்ளார். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக N R சுகுமாரன் பணியாற்றுகிறார்.