சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்க வேண்டும்-முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த அறிக்கை விவரம்:
பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டு 22 சட்டமன்றத் தொகுதிகளும், 200 கவுன்சிலர் வார்டுகளும் இருக்கின்றன. மிகப் பரந்து விரிந்து கிடக்கிறது சென்னை மாநகராட்சியின் எல்லை. அதனால், இதனை நிர்வகிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம். அதனால், சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க வேண்டும்.
திமுக தலைவரான அண்ணன் ஸ்டாலின் மேயராக இருந்தபோது, 16 சட்டமன்றத் தொகுதிகளும், 155 கவுன்சிலர் வார்டுகளும் சென்னை மாநகராட்சியில் இருந்தன. கடந்த 2006-2011-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் அண்ணன் ஸ்டாலின் இருந்த போது, மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து அதன் எல்லைக்குள் 22 சட்டமன்ற தொகுதிகளையும், 200 வார்டுகளையும் கொண்டு வரும் ப்ரபோசல் தயாரானது. அன்றைக்கு மாநகராட்சியின் கமிஷனராக இருந்த கார்த்திக்கேயன் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் இந்த ப்ரபோசல் அன்றைய திமுக அரசால் கொடுக்கப்பட்டது.
இந்த சூழலில், 2011 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கிறது. முதலமைச்சரானார் ஜெயலலிதா அம்மா. அப்போது, மாநாகராட்சியின் எல்லை விரிவாக்கம் தொடர்பான ஃபைலை ஜெயலலிதா அம்மாவுக்கு அனுப்பி வைக்கிறார் கார்த்திக்கேயன் ஐ.ஏ.எஸ்.!
அன்றைக்கு அதிமுகவின் வடசென்னை மா.செ.வாக இருந்த வெற்றிவேலிடம், இது குறித்து விரிவாகப் பேசினேன். உடனே ஜெயலலிதா அம்மா விற்கு ஒரு நோட் அனுப்பினார் வெற்றிவேல். அதில், “திமுக கொண்டுவந்த திட்டத்தை நாம் ஏற்கத் தேவையில்லை அம்மா. மாநகராட்சி யின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது நமக்குத்தான் பாதகமாக அமையும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா அம்மாவிடம் சாதுர்யமாக காய்களை நகர்த்தி, அண்ணன் ஸ்டாலின் கொண்டு வர முடிவு செய்த ப்ரோபோசலுக்கு கையெழுத்து வாங்கி விடுகிறார் கார்த்திக்கேயன் ஐ.ஏ.எஸ்.!
அதன்படி 2011 காலக்கட்டத்தில், 22 சட்டமன்றத் தொகுதிகளையும் 200 வார்டுகளையும் உள்ளடக்கி பெருநகர சென்னை மாநகராட்சி உருவாகிறது. அப்போதிலிருந்தே சென்னை மாநகராட்சியை நிர்வாகம் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருகிறது மாநகராட்சி, மக்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவே இல்லை. நிறைய பிரச்சனைகளால் நிர்வாகம் ஸ்தம்பித்து வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒரு ஆணையர், 3 மண்டல டெபுடி கமிஷ்னர்கள், 4 துணை ஆணையர்கள் (பணிகள், சுகாதாரம், கல்வி, வருவாய் மற்றும் நிதி) என 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் ஆரோக்கியமாக இல்லை.
ஜெயலலிதா அம்மா மறைவுக்கு பிறகு அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியிடம், சென்னை மாநகராட்சி எதிர்கொள்ளும் நிர்வாக சிக்கல்களைச் சொல்லி, “சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க வேண்டும். இது குறித்து சட்டமன்றத்தில் பில் பாஸ் பண்ணுங்கள்” என கோரிக்கை வைத்தேன். ஆனால், ஏனோ இதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர்.
இன்றைக்கு ஆவடி மாநகராட்சியில் ஒரு சட்டமன்றத் தொகுதியும், தாம்பரம் மாநகராட்சியில் 2 சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கிறது. தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால், அதன் எல்லைக்குள் குறைந்தபட்சம் 1 சட்டமன்றத் தொகுதியும் அதிகப்பட்சமாக 4 சட்டமன்ற தொகுதிகளும் தான் இருக்கின்றன. நிர்வாகம் செய்வதும் எளிமையாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், சென்னை மாநகராட்சியில் மட்டும் 22 சட்டமன்ற தொகுதிகள்; 200 கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. அதேபோல, ஒரு கவுன்சிலர் வட்டத்தில் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் தற்போது இருக்கின்றன.
இவ்வளவு பெரிய மாநகராட்சியை ஒரு மேயரால் நிர்வகிக்க முடியவில்லை. நிர்வகிப்பதும் கடினம். இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான். நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுவது போல, பெரு நகர சென்னை மாநகராட்சியையும் பிரிக்க வேண்டும். அந்த வகையில், சென்னை மாநகராட்சியை தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 மாநகராட்சிகளாக பிரிக்கும் நடவடிக்கைகளை தற்போதைய தவெக அரசின் முதல்வர் விஜய் அவர்கள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
அதேபோல, ஒரு கவுன்சிலர் வட்டத்தில் அதிகப்பட்சம் 10,000 வாக்குகள் இருப்பது போல சீரமைக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்கப்படுவதன் மூலம் ஒரு மாநகராட்சிக்கு 1 மேயர், 1 டெபுடி மேயர், 10 மண்டல தலைவர்கள், 6 நிலைக்குழுத் தலைவர்கள் கிடைப்பார்கள். ஒரு மாநகராட்சிக்கு குறைந்தது 100 கவுன்சிலர் வட்டாங்கள் கிடைக்கும். இதன் மூலம் மாநகராட்சியை நிர்வகிப்பது எளிமையாக மாறுவதுடன் சென்னை மக்களுக்கான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்கும் ; உள்கட்ட மைப்பு வசதிகளும் வளர்ச்சி அடையும்! நிர்வாகம் செய்வதும் எளிதாகும். அரசியல் ரீதியாக நிறைய பேருக்கு பதவிகள் கிடைக்கும். மேற்கண்ட வளர்ச்சியினால் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய் அவர்கள், சென்னையை 3 மாநகராட்சிகளாக பிரிப்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
இப்படிக்கு
கராத்தே தியாகராஜன்
என்று தனது அறிக்கையில் முன்னாள் ஆக்டிங் மேயர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.