“சமநிலையின்மை என்பது ஒரு வாய்ப்பு. ஆனால் நாம் வேறு பாதையை தேர்வு செய்வோம்” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்துள்ள 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.
ஒன்றிய அரசின் தடைகளை மீறி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி, 2022-2023ஆம் ஆண்டில் 7.61 சதவீதம், 2023-2024இல் 9.19 சதவீதம், 2024-2025இல் 6.48 சதவீதம் என்று இருக்கும் நிலையில், தமிழ்நாடு 2021-2022ஆம் ஆண்டில் இருந்து 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை எட்டி வருவதாக பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், 2024-2025 நிதியாண்டிலும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வரவு செலவு திட்டத்தில் வழிமுறைகள் காணப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.
தமிழ்நாடு, 2023-2024ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9.21 சதவீதம் பங்களித்துள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தி தற்போதைய மதிப்பில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.
தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகமாக இருப்பதுடன், தனிநபர் வருமானத்தில் தமிழகம் இந்திய மாநிலங்களில் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
உற்பத்தித் துறையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம் ஆகும்.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.
மொத்தம் 35.56 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் தமிழகம் 2023-2024ஆம் ஆண்டில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியால் ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று தமிழகம் அழைக்கப்படுவதாகவும் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
2024 ஆம் ஆண்டில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவையெல்லாம் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சிறந்த நிர்வாகத் திறனை காட்டுகின்றன.
சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும்,
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள். மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியன .
மகளிர் நலனுக்கு முக்கியத்துவம் தந்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.
இவையெல்லாம் தொழில் துறையில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடைய வழி வகுக்கும்.
சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளது சமூக நலனில் அரசு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
கல்வித்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நம்பிக்கை அளிக்கிறது.
மொத்தத்தில் நிதியமைச்சர் குறிப்பிட்டு இருப்பதைப் போல பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறவும், மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோட நிதிநிலை அறிக்கை பாதை அமைத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
சென்னை – 8
‘தாயகம்’
14.03.2025