







சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!: குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்..!!
சென்னையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. சாதாரண காய்ச்சலை போல் அல்லாமல் எச்1என்1 காய்ச்சலாக இருப்பதால் குணமாக 5 முதல் 7 நாட்கள் வரை ஆகிறது. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 25 கூடுதல் படுக்கைகளுடன் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்கனவே உள்ள காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி முதியவர்களையும் வைரஸ் காய்ச்சல் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் வந்தால் பீதியடைய தேவையில்லை என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எழிலரசி கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே இன்புளூயன்சா என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்க்கு குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்புளூயன்சா வைரஸின் அறிகுறிகள் சளி, தொண்டை வலி, உடல்வலி, இருமல், தலைவலி இவற்றுடன் விட்டு விட்டு காய்ச்சல் வரும். 3 நாட்களுக்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக் கொள்வது நல்லது.வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் தானாக மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து மருத்துவரை அணுக வேண்டும்.