தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜூனியர் பாலையா அவர்கள், புகழ்பெற்ற நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனான இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானதும் அவருடைய தந்தையாரால் ஜுனியர் பாலய்யா என பெயர் சூட்டி அழைக்கப்பட்டார். இவர் தியாகம், வாழ்வேமாயம், கரகாட்டக்காரன், கோபுரவாசலிலே, சுந்தரகாண்டம், அமராவதி, சாட்டை, கும்கி, தனிஒருவன், புலி, நேர்கொண்டபார்வை, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்றார். 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து திரையுலக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அதுமட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
# தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்களின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக துணைத்தலைவர் திரு.பூச்சி S.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வி. கோவைசரளா, திரு.ஸ்ரீமன், திரு.விக்னேஷ், திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமச்சந்திரன், திரு. M.A.பிரகாஷ் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லலிதாகுமாரி, திரு.சௌந்திரராஜன் ஆகியோர்கள் அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.