ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தில் ராஜா.
கட்டிட பொறியாளரான விஜய் சத்யா, மெக்கானிக் வேலையிலும் ஆர்வமுள்ளவர். அழகான மனைவி ஷெரின், அன்பான குழந்தையென குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வரும்போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதில் அமைச்சர் ஏ.வெங்கடேஷின் மகன் இறந்து விட, விஜய்சத்யாவுக்கு விலங்கு போடுகிறது போலீஸ். தானும் தன் குடும்பமும் சிக்கலில் இருந்து மீள விஜய் சத்யா செய்யும் வேலையே கதை.முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்கு பொருந்தும் கட்டுமஸ்தான தேகம், ஜெயம்ரவி சாயல் முகம் என ஹீரோவுக்கான அத்தனை அமசமும் விஜய் சத்யாவிடம் உள்ளது. ஆனால் நடிப்பில்? உழைப்பு தேவை.விஜய் சத்யாவின் மனைவியாக ரொம்ப நாள் கழித்து ஷெரீன். ‘துள்ளுவதோ இளைமை’ படத்தில் தூக்கத்தை கெடுத்த அந்த ஷெரீனா இது?.. தூக்கலான மேக்கப்பில் வந்தாலும் இளமை மிஸ்ஸிங். அந்த பாடல் காட்சியில் மட்டும் சூப்பரா இருக்கார்.
அப்புறம் இயக்குனர் ஏ.வெங்கடேஷும் வழக்கமான அமைச்சர் கேரக்டரில் நடித்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா நடக்கிறாரே தவிர நடிக்கவில்லை. வனிதா, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா என நட்சத்திர பட்டாளம் இருக்கிறது.
அம்ரீஷ்தான் இசையமைப்பாளர். அந்த ஓப்பனிங் பாட்டு செம. அவரே ஆடியும் இருக்கிறார். ஆனால் அந்த நளினம்…. ஆகட்டும் மன்னா. பின்னணி இசை… வாங்கிய காசுக்கும் அதிகமாக இன்ஸ்ட்ருமெண்ட் பயன்‘படுத்தியிருக்கிறார்’.
ஏ.வெங்கடேஷ் தன் பாணியில் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து விறுவிறுப்பாக
‘தில்ராஜா’வை கொண்டு போகிறார். பார்த்தால் தப்பில்லை.