Take a fresh look at your lifestyle.

நாங்குநேரி நிகழ்வு நெஞ்சில் ஆணிகொண்டு கீறிய கீறல்!

85

நாங்குநேரி நிகழ்வு நெஞ்சில் ஆணிகொண்டு கீறிய கீறல்!
புத்தியை தீட்ட வேண்டிய இடத்தில்
கத்தி தீட்டப்பட்டிருக்கிறது!

ஜாதீதீதீ அனைந்து வரும்
நேரத்தில்
இப்படி யாரோ எங்கோ
பற்ற வைத்து விடுகிறார்கள்!
ஜாதி அழிந்துவிட்டது
என்றால் பொய்யாகும்!
அழிந்துகொண்டு இருக்கிறது
என்பதும் மெய்யாகும்
அழியவிடாமல் ஊதிக்கொண்டிருப்பது யார்?
பள்ளிப் பருவத்தில்
ஜாதி மிருகத்தை
நுழைத்தது யார்?

பெற்றோரா?
சமூகமா?
அரசு ஆராய வேண்டும்!
ஜாதி என்ற நச்சுப் செடியின்
ஆணிவேரை புடுங்காமல்
கிளைகளை வெட்டிக்கொண்டு
வளருது! வளருது என்றால்
எப்படி கருகும் ஜாதிச்செடி?
ஜாதி பார்த்து
பள்ளியில் சீட்டு சரி!
தேர்தலில் சீட்டு
கொடுத்தால் எப்படி?

அரசியல் போர்வைக்குள்
ஜாதி மிருகம்
வெறியோடு விழித்துக் கொண்டிருக்கிறது!

ஒவ்வொரு ஜாதிக்கும்
தலைவர்களை உருவாக்கிக்கொண்டு
ஜாதியை எப்படி
ஒழிப்பீர்கள்?
முத்துராமலிங்கத் தேவரில்
தேவரையும்
சிதம்பரம் பிள்ளையில்
பிள்ளையையும்
அகற்றிவிட்டால்
ஜாதி அகன்று விடுமா?
முதலில்
ஜாதித் தலைவர்களில்
தலைவர்களை அகற்றுங்கள்!
அரசியல் என்பது
ஜாதிக்கானது அல்ல!
ஜனநாயகத்துக்கானது!
ஜாதி ஓட்டுக்கான அரசியலே
ஜாதி கலவரங்களின் களமாகும்!

திரைப்படங்களின் தாக்கம்
இளைய தலைமுறைக்குள்
இருக்கும்!
ஜாதி வெறியைத் தூண்டும்
படங்களை தணிக்கைக்குழு
தவிர்க்க வேண்டும்!
‌ஜாதி ஒற்றுமைக்கான
படத்திற்கு வரிவிலக்கு வேண்டும்!

மக்கள் ஒன்றை
கவனிக்க வேண்டும்!
ஜாதிமக்களுக்கு
பயன்படுபவன் யார்?
தன் பொழப்புக்காவும்
அரசியல் வாழ்க்கைக்காவும்
தன் ஜாதியை பயன்படுத்திக்
கொள்பவன் யார்!
என்பதை கண்டறிந்து அவர்களை
ஒதுக்க வேண்டும்!

மதிப்பெண் பெறுவதற்காக மட்டும்
ஜாதிகள் இல்லையடி பாப்பாவை
மனப்பாடம் செய்து கொண்டிருந்தால்
எப்படி?

ஆசிரியர் கையில்
பிரம்பை பிடிங்கினால்
மாணவன் கையில்
கத்தி ஏறும் என்பது
நாங்குநேரி கற்றுத் தந்த பாடம்!

ஜாதிவெறியை தூண்டுவோரிடம்
இருந்து
ஒற்றுமை காப்போம்!
*இயக்குனர் பேரரசு*