டியர் ரதி – திரைப்பட விமர்சனம
தயாரிப்பு நிறுவனம்: இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ் எல் எல் பி & லாக் லைன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : மோகன மஞ்சுளா. எஸ்
நடிகர்கள்: சரவணா விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன், சரவணன் பழனிச்சாமி தமிழ்செல்வன், பசுபதி மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம்: பிரவீண் கே. மணி
ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன்
இசை : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் சரவணா விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ‘டியர் ரதி’ எனும் திரைப்படம் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி இரண்டாம் தேதியன்று வெளியாகி இருக்கிறது. ஸ்வீடன், கிரீஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விருதுகளை வென்ற படைப்பு என்ற அடையாளமும், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த நிலையிலும், படத்தைக் காண ஆவலுடன் திரையரங்கத்திற்கு சென்ற ரசிகர்களுக்கு படக் குழுவினர் சிறந்த அனுபவத்தை வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஐ டி துறையில் பணியாற்றும் இளைஞனான மதனுக்கு, சக பெண்களுடன் இயல்பாக பழகுவதிலும், அவர்களின் கண்களைப் பார்த்து பேசுவதிலும், தயக்கமும், அச்சமும், வெறுப்புணர்வும் கொண்ட கைனோஃபோபியா ( Gynophobia) என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் உளவியல் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார். அலுவலகத்தில் அவருடன் பணியாற்றும் சக ஊழியரும், நண்பருமான ராம்- மதனின் கூச்ச சுபாவத்தை மாற்றுவதற்காக பாலியல் தொழிலாளியான ரதி என்பவரை இருவரும் சேர்ந்து சந்திக்கிறார்கள். ரதியிடம் இயல்பாக பேசும் மதன், ‘ தனக்கு பெண்களிடம் இயல்பாக பேசுவதில் தயக்கம் உள்ளதாகவும்… இந்த தயக்கத்தை உடைக்க உங்களால் உதவ முடியுமா?’ என கேட்கிறார் . இதற்கு ரதி ஒப்புக்கொள்ள மதனும், ரதியும் ஒரு நாள் முழுவதும் ‘டேட்டிங்’ கில் ஈடுபடுகிறார்கள். அதன் போது மதனுக்கு ஏற்படும் எதிர்பாராத வித்தியாசமான அனுபவங்கள் தான் 130:46 நிமிடங்கள் கொண்ட இப்படத்தின் கதை.
நான் லீனியர் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதையில்.. கதையின் நாயகன் தனக்கான அனுபவத்தை பார்வையில பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது போல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை …ரசிகர்களை உற்சாகமாக கதையுடன் பயணிக்க வைக்கிறது.
தொடக்கத்தில் காதலர்களாக கடற்கரையில் அமர்ந்து கொண்டு மதன் தன் கதையை சொல்லும்போது கிடைக்கும் சுவாரசியம் படம் நெடுகிலும் பரவி கிடக்கிறது. இதனை மேலும் அதிகப்படுத்த ரதியின் கணவன் வரதன் ஒரு குழுவினருடன் ரதியை தேடுவதும்… காவல் ஆய்வாளரின் ஒருவரின் துப்பாக்கியை ரதி எடுத்து வந்ததால்… காவல் ஆய்வாளர் அவரை ஒரு பக்கம் துரத்துகிறார் என சுவராசியமான திரைக்கதை நகர்வால்.. ரசிகர்களுக்கு டார்க் ஹீயூமர் – கிரைம் திரில்லர்- சோசியல் மெசேஜ் – செக்ஸ் எஜுகேஷன் குறித்த ஃபிரீ அட்வைஸ் – என பலவிதமான அனுபவ தருணங்கள் கிடைக்கிறது.
ஒரு புள்ளியில் மதனின் ஆசையை நிறைவேற்ற ரதி தீர்மானிப்பதும்.. அதற்காக இருவரும் பயணிப்பதும் எதிர்பாராத டுவிஸ்ட். அதிலும் மதன் தனக்கு டியூஷன் எடுத்த அக்கா மீதான விருப்பத்தை தெரிவிக்க அதை ரதி நிறைவேற்றும் தருணம் ஸ்பெஷல் டச்.
மதனின் இரண்டாவது ஆசை ஆபாசமானதாக இருந்தாலும்.. அதனை காட்சிப்படுத்தி இருப்பதில் படக் குழுவினரின் சமூக பொறுப்புணர்வு பளிச்சிடுகிறது.
அன்புக்கும், காதலுக்கும் இடையேயான வித்தியாசத்தை நாயகன் சொல்வதை (ரிப்பீட் ஆவதால்) சில இடங்களில் மட்டும் ரசிக்க முடிகிறது.
உச்சகட்ட காட்சியில் மதனுக்கும் , ரதிக்கும் இடையேயான உறவை இயக்குநர் உரையாடல் மூலமாக விவரித்திருப்பது யாரும் எளிதில் யூகிக்க முடியாதது. சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட.
மதனாக திரையில் தோன்றியிருக்கும் நடிகர் சரவணா விக்ரம் முதலில் கதாபாத்திரத்திற்கு பொருந்தாதது போல் தோன்றினாலும்… தன்னுடைய பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடுகிறார். அவருடைய கண்கள் சிறியதாக இருந்தாலும்… உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்பதற்கு தடுமாறினாலும்…. அந்த கதாபாத்திரத்தை நுட்பமாக கையாண்டு நியாயம் சேர்த்திருக்கிறார். ஜென் ஜீ ரசிகர்களுக்கான நட்சத்திர நடிகராக இவர் உயரக்கூடும்.
ரதி@ ரதிதேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை ஹஸ்லி அமான் – வசனம் பேசும் இடங்களை விட பேசாமல் மௌனமாக இருக்கும் பல தருணங்களில் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வசப்படுத்துகிறார். முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது அவருடைய துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.
வரதன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் இதற்கும் முன் திரையில் தோன்றியிருந்தாலும்.. இந்த திரைப்படத்தில் இயக்குநர் அவரை சரியாக பயன்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

இவர்களைக் கடந்து மதனின் நண்பனான ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கும் சரவணன் பழனிச்சாமி ஆகியோர் இயக்குநர் சொன்னதை செய்து திரைக்கதையின் வேகத்திற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவும், எம். எஸ். ஜோன்ஸ் ருபர்ட்டின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி பிரேம்- படத் தொகுப்பில் செய்திருக்கும் மாயம்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
பாலியல் தொழிலாளி ஒருவருக்கும் கன்னி கழியாத இளைஞன் ஒருவருக்கும் இடையேயான ஒரு நாள் டேட்டிங் தான் படத்தின் மைய கதை என்றாலும்.. இதன் பின்னணியில் இயக்குநர் உருவாக்கி இருக்கும் இருண்ட உலகம்- இருண்ட மனிதர்கள்- ரசிகர்களை கவரவே செய்கிறார்கள்.
டியர் ரதி – சியர்ஸ் ரதி