Take a fresh look at your lifestyle.

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

90

தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வைப் பேசும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும்… என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வித்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள். இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பது குறித்தும் விவரிப்பது தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.

அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை நீலிமா இசை இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகிகளின் முகங்கள் வண்ணமயமாக இடம்பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

காதலைப் பற்றி காமத்தை கடந்து உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பதால் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.