*அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சரவணன் !*
*இப்போது நிறைய படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது – இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்*
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காதல் சுகுமார் பேசும்போது,
தயாரிப்பாளர் கேட்டதுபோலதான். நிறைய பேரை கூப்பிட்டோம் ஆனால் திருமணம் காரணமாக வரவில்லை. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிகின்றனர். தமிழ் தலைப்பாக இருக்கிறது. தமிழில் தலைப்பு வைத்ததற்கு வாழ்த்துகள். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது. கருடன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினீர்கள். பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ் தலைப்பாகவும் உள்ளது.இப்போது நிறைய படங்களில் தமிழை தேட வேண்டியுள்ளது.உமாபதி இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். திரையுலகம் மீண்டு எழுந்து வருவது போல தோற்றம். கொஞ்சநாட்களாக திரைப்படம் வெளியாகும் எண்ணிக்கை அதிகமாகவும் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. பித்தலை மாத்தி படமும் நிச்சயம் டிரெண்ட் மாத்தி படமாக இருக்கும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி.
கே.ராஜன் பேசியதாவது, நான் பலரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வட்டி வராமல் தவிக்கிறேன். இப்படி நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க கவனமாக இருங்கள். இவர்களுக்கு இடையில் தங்கமான தயாரிப்பாளர் சரவணன். படப்பிடிப்பு எப்படி நடந்தது என்று கேட்டால் மிகவும் நன்றாக நடந்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார். ஒரு தயாரிப்பாளர் அப்படி சொல்றதே இல்லை. இயக்குனர் பற்றி அவ்வளவு நன்றாக சொன்னார். படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயம் பண்ணிவிட்டு வந்துள்ள தயாரிப்பாளர். தயாரிப்பாளர் இந்த படம் மட்டும் எடுக்கவில்லை யோகி பாபுவை வைத்து ஜோரா கைதட்டுங்க என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். இன்னைக்கு சினிமா எவ்வளவு சிரமத்தில் இருக்கு என்று உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு படம் ஆரம்பிச்சா தயாரிப்பாளர்கள் படும் வேதனை. சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்காங்க. ஆனா சில இயக்குனர்கள் பித்தல மட்டும் மாற்றவில்லை தயாரிப்பாளரையே மாத்திவிடுகின்றனர். பணக்காரனாக வந்தவரை ஏழையாக அனுப்பி வைக்கின்றனர். எல்லாமே ஆங்கில தலைப்பு. தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர். நான் தமிழக முதல்வரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தேன் கவனிப்பதாக சொல்லியுள்ளனர். 100 படங்கள் வந்தால் 80 படங்கள் காணாமல் போகிறது. பெரிய வருத்தமாக உள்ளது என்று பேசினார்.
கலை இயக்குனர் வீர சமர் பேசியதாவது, இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். இதில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் சிறு படங்களுக்கு உயிர் கொடுத்து பேசும் ஒரு அற்புதமான மனிதர். இவரை போன்றவர்களை நாம் பாதுகாத்து வைக்க வேண்டும்.உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் ஒரு சிறு படத்துக்கு வந்து இருக்கும் ஆர்வி உதயகுமார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் சரவணன் தயாரிப்பாளர் மட்டுமின்றி எல்லா வேலையையும் செய்யக்கூடியவர். இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு நாம் மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டும். இப்படத்தில் ஹீரோயினுக்காக அயர்ன் பாக்ஸில் ஒரு வண்டி ரெடி செய்தோம். இயக்குனர் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக வருவார்.சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாத கதையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எடுத்துள்ளனர். தயாரிப்பாளர் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் நன்றி.
இயக்குனர் மாணிக்க வித்யா பேசும்போது, ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு எனது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்துள்ளார். உலகம் முழுவதும் 70 திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்கிறார். இப்படத்தின் தலைப்பு மீது ஆரம்பத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. நாம் எல்லோரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளுக்குள் வேறு தோற்றத்தில் இருப்போம். அதுதான் இந்த கதையிலும்.படத்தில் வில்லி கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த படத்தின் ரீ ரிலீஸ் மூலம் நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று பேசினார்.
தயாரிப்பாளர் சரவணன் பேசும்போது, ஒரு படம் குழந்தை மாதிரி.தாய் இயக்குனர் என்றால் தகப்பன் தயாரிப்பாளர் தான்.ஒரு படத்தை நடுத்தெருவில் வீசி செல்வது தயாரிப்பாளருக்கு அழகல்ல. அதனை சரி செய்யும் வேலையை தான் நான் செய்துள்ளேன்.சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை டெல்லி வரை சென்று போராடி ரிலீஸ் செய்தேன். தடை என்றெல்லாம் சொன்னார்கள். ஓடாத படத்தையே ரிலீஸ் செய்தநான் ஓடும் தெரிந்த படத்தை எப்படி விடுவேன். இந்த படம் எனக்கு மிகப் பெரிய அனுபவத்தை கொடுத்தது. இந்த படம் எடுக்கும்போது எனக்கு நெஞ்சு வலி வந்தது. வீட்டில் எல்லோரும் என்னை படம் எடுக்க வேண்டாம் என்றனர். ஆனாலும் இயக்குனருக்காக எனது முடியாத சூழலிலும் நான் வேலை செய்தேன். இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி.