Take a fresh look at your lifestyle.

கஸ்டடி சினிமா விமர்சனம்

124

ரசிகர்களை விரட்டி அடிக்கும் ‘கஸ்டடி’

சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு மோசமாக ஒரு படம் வந்திருக்காது. நாக சைதன்யா, சரத்குமார், பிரியாமணி, அரவிந்த் சாமி, கயல் ஆனந்தி, பிரேம் ஜி என படத்திற்கு சிறந்த நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்த வெங்கட்பிரபு, கதையை கோட்டை விட்டுள்ளார்.

நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் நாக சைதன்யாவிடம் பிரபல ரவுடி ராஜூ (அரவிந்த் சாமி) மாட்டிக் கொள்கிறார். ஆரம்பத்தில் அவர் ரவுடி என்பதை அறியாத நாக சைதன்யா, பின் ரவுடி என அறிந்து கொள்கிறார். அரவிந்த் சாமி நேரடியாக முதல்வர் (பிரியாமணி) உடன் தொடர்பில் இருக்கிறார். பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் அந்த பிரபல ரவுடியை நாக சைதன்யா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினாரா என்பது தான் படத்தின் கதை.

காசு வாங்குகிறோம் படத்தை சுமார் 2 மணி நேரம் ஆவது ஓட்டி ஆக வேண்டும் என கதாபாத்திரங்களை நிரப்பி, காதை சுத்தி மூக்கைத் தொடும் கதை. படத்தில் ஒன்றே ஒன்று மட்டும் ப்ளஸ் என சொல்ல ஆசை தான், ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. தெலுங்கு பட சாயல் முழுக்க முழுக்க வருகிறது.

கேஜிஎஃப் படத்தில் பெரியம்மா துப்பாக்கி என்று வரும், அதே துப்பாக்கி கமலின் விக்ரம் படத்திலும் வரும். சரி இந்த துப்பாக்கி இடம்பெறும் படம் எல்லாம் நன்றாக ஓடுகிறது என எண்ணி இந்த படத்திலும் அந்த துப்பாக்கியை காட்டுகிறார் இயக்குநர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் அந்த துப்பாக்கிக்கு உண்டான மரியாதை போகிவிட்டது.

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை வெங்கட்பிரபு படத்தில் பிரேம்ஜி இல்லாமல் எப்படி., நகைச்சுவை நடிகர் என்ற பெயரில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நோ ஸ்மோக்கிங் என்று வருவது போல், இது காமெடி காட்சி என கீழே எழுதியிருக்கலாம். இதை செய்யாததால் காமெடி காட்சிகள் எதுவும் எடுபடவில்லை.

மொத்தமாக சொல்லவேண்டும் என்றால் தமிழ் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது கஸ்டடி.