Take a fresh look at your lifestyle.

’கபில் ரிட்டன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

176

தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

என்ன கதை?

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது. தனது தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினால் கூட அவர்களை விரட்டியடிப்பார். அப்படிப்பட்டவரின் மகனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கு ஸ்ரீனி செளந்தரராஜன் மறுப்பு தெரிவிப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டை தவிர மற்ற விளையாட்டில் ஈடுபடுமாறு சொல்கிறார். கிரிக்கெட் விளையாட்டை ஸ்ரீனி செளந்தரராஜன் வெறுப்பதற்கு காரணம் என்ன? என்பதை கண்டறியும் அவரது மனைவி, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண, அதன் பிறகே அவர் தனது மகனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறார்.

இதற்கிடையே. தேசிய கிரிக்கெட் அகடாமி சார்பில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. அந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் ஸ்ரீனி செளந்தரராஜனின் மகன் தவறாக பந்து வீசியதாக நிராகரிக்கப்படுகிறார். ஆனால், ஆடுகளத்தில் இருக்கும் குறைபாட்டினால் தான், வீரர்கள் பந்து வீசுவது தவறாகிறது, என்பதை அறியும் ஸ்ரீனி செளந்தரராஜன் தேர்வுக் குழுவினரிடம் உண்மையை சொல்லி விளக்குவதோடு, தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார். ஆனால், அவருடைய வாதத்தை தவறாக புரிந்துக்கொள்ளும் தேர்வுக் குழுவின் ஒருவரான ரியாஸ் கான், அவரது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க ஸ்ரீனிக்கு ஒரு போட்டி வைக்கிறார். கிரிக்கெட்டையே வெறுப்பவர் எப்படி இந்த சவாலை சமாளிக்கப் போகிறார், என்று ஸ்ரீனியின் மகன் உள்ளிட்ட ஒட்டு மொத்த கூட்டமே அதிர்ந்து போக, அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உரையும் அளவுக்கு ஸ்ரீனி செளந்தரராஜன் அந்த சவாலில் வெற்றி பெறுகிறார். அவருடைய இந்த அபாராமான திறமையை பார்த்து வியக்கும் தேர்வுக்குழு எடுக்கும் முடிவால், இதுவரை கிரிக்கெட் உலகில் நடக்காது ஒரு அதிசயம் நடக்கிறது. அது என்ன?, கிரிக்கெட்டை ஸ்ரீனி செளந்தரராஜன் வெறுத்தது ஏன்?, கிரிக்கெட்டை வெறுத்தவர் இப்படி உலக சாதனை நிகழ்த்தும் அளவுக்கு பந்து செயல்பட்டது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கபில் ரிட்டன்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீனி செளந்தரராஜன், முதல் படம் போல் அல்லாமல் தயக்கம் இன்றி நடித்திருக்கிறார். சிறு வயதில் நடந்த சம்பவத்தை எண்ணி கலக்கம் அடைவது, ஆட்டோ ஓட்டுநரிடம் நட்பு பாராட்டுவது, மகனுக்கு ஒரு பிரச்சனை என்றதுமே அமைதியாக இருந்தவர் அதிரடி அவதாரம் எடுப்பது, மற்றவர்கள் கேலி செய்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து போவது, என்று அனைத்து இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் பல நல்ல விசயங்களை சொல்லி பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு, அவர்களுக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீனி செளந்தரராஜனின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனது கணவன் தடுமாறும் இடங்களில் அவரது பிரச்சனையை அறிந்து, அதில் இருந்து அவரை மீட்டெடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டும்படி இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இருக்கிறது.

சிறு வயது ஸ்ரீனி செளந்தரராஜன் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தாத்தா, அப்பா மற்றும் அம்மா என்று ஆளுக்கு ஒரு ஆசையை தன் மீது திணித்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விளையாட்டாக பயணிக்கும் ஜான் இயல்பாக நடித்திருக்கிறார்.

மாஸ்டர் பரத், பார்ப்பதற்கு நடிகர் விஜய் சாயலில் இருப்பதோடு, நடிப்பை மிக சாதாரணமாக கையாள்கிறார். அவரது நடை மற்றும் நடிப்பு, பாடல்களில் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷன் என அனைத்துமே கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. எந்தவித அனுபவமும் இன்றி முதல் படத்திலேயே அசத்தியிருப்பவர், சினிமாவுக்கான கலைகளில் தேர்ச்சி பெற்று பயணித்தால் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பார் என்பது உறுதி.

கிரிக்கெட் தேர்வுக் குழுவின் உறுப்பினர் வேடத்தில் நடித்திருக்கும் ரியாஸ் கான், ஆரம்பத்தில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானாலும், அதன் பிறகு ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பால் சிறந்த குருவாக முத்திரை பதிக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் நடித்திருக்கும் வையாபுரி, கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது பஞ்ச் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பதோடு, நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயணித்திருக்கிறார்.

பருத்தி வீரன் சரவணன், பேபி ஷர்ஷா ஆகியோரும் தங்களது பணியை குறையில்லாமல் செய்து ரசிகர்கள் மனதில் நிறைந்துவிடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ், கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். கிரிக்கெட் தொடர்பான காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் எளிமையான லொக்கேஷன்களை கூட ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில், சினேகன், பா.விஜய், அருண்பாரதி ஆகியோரின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருப்பதோடு, புரியும்படிம் இருக்கிறது. பாடல் வரிகள் அனைத்தும், கருத்து நிறைந்தவைகளாகவும், உத்வேகம் கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

வாழ்க்கையில் சாதிக்க வயது தடை இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் கதையில், கிரிக்கெட் விளையாட்டையும், அப்பா – மகன் செண்டிமெட்டையும் சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீனி செளந்தரராஜன், அதில் ஒரு சஸ்பென்ஸையும் அவைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். வழக்கமான விளையாட்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் திரைக்கதை அமைத்ததோடு, படம் முழுவதும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன் என்று முதல் படத்திலேயே பல பணிகளை சிறப்பாக செய்து கவனம் ஈர்க்கும் ஸ்ரீனி செளந்தரராஜன், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ஒரு கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். தந்தை – மகன் இடையிலான பாசத்தை வெளிப்படுத்துவது மற்றும் மகனை விளையாட்டு வீரராக வெற்றி பெற செய்ய போராடும் தந்தை போன்ற ஜானரில் பல படங்கள் வந்திருந்தாலும், இந்த கதையை மிக வித்தியாசமாக கையாண்டிருக்கும் ஸ்ரீனி செளந்தராஜன், எதிர்பார்க்காத திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இயக்குநராக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்கானது தான் என்றாலும், அதில் சமூகத்திற்கான நல்ல கதையை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி சொல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் ஸ்ரீனி செளந்தரராஜனின் இந்த ‘கபில் ரிட்டன்ஸ்’ முயற்சி என்றுமே தோற்காது என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.