கதை திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எல்.ஜி.ரவிசந்தர், தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும் மஹானா சஞ்சீவி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக மைம் கோபி நகைச்சுவைக்கு ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரெமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்க சிங்கம் புலி, இயக்குநர் சரவண சுப்பையா, கிரேன் மனோகர், தீபா சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்திருப்பதோடு நாற்பது குழந்தை நட்சத்திரங்களும் பங்கேற்றிருப்பது குழந்தைகள் படம் எனலாம்.
சிறு வயதில் செய்த குற்றத்திற்காக சிறையில் பல வருடங்களை கழித்துவிட்டு விடுதலையாகும் நாயகன் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, உழைத்து வாழ நினைத்து வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்காததால், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட முடிவு செய்பவர்கள், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள். அதன்படி, மைம் கோபி பேச்சை கேட்டு வால்வோ பேருந்து ஒன்றை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், அந்த பேருந்தில் 40 குழந்தைகளும், மலேசியாவில் இருந்து வந்த சகோதரிகள் மஹானா சஞ்சீவி மற்றும் காயத்ரி ரெமா இருக்கிறார்கள். அவர்களை சேர்த்து கடத்தும் பாலாஜி அவர்களை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்.
ஆனால், அந்த குழந்தைகள் ஆதரவற்றவர்கள் என்பதால், அவர்களுடைய திட்டம் தோல்வியடைகிறது. இதனால், மஹானா மற்றும் காயத்ரி இருவரையும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையே, பாலாஜி மட்டும் ரெடின் கிங்ஸ்லி கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் மலேசியா நாட்டைச் சேர்ந்த பணக்கார வீட்டு பெண்கள் என்பதால், அவர்களை கடத்தி பணம் பறிக்க மைம் கோபி திட்டம் போடுகிறார். இறுதியில் பாலாஜி மற்றும் கிங்ஸ்லி காதல் வெற்றி பெற்றதா? அல்லது மைம் கோபியின் திட்டம் வெற்றி பெற்றதா? என்பது தான் ‘வா வரலாம் வா’ படத்தின் கதை.
ண
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ், கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற நாயகனாக இருக்கிறார். ஆட்டம் பாட்டத்துடன் ஆக்ஷனிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மஹானா சஞ்சீவி கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருப்பதோடு, பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் மைக் கோபி தனது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். பல கெட்டப்புகளை போட்டு குற்ற செயல்களில் ஈடுபடும் அவரது நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ரெடின் கிங்ஸ்லி நாயகனுடன் படம் முழுவதும் வலம் வரும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார். சிங்கம் புலி, தீபா ஆகியோரது கூட்டணி காமெடியும் சிரிப்பு சரவெடியாக உள்ளது.
காயத்ரி ரெமா, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் நல்ல மெலோடியாக இருப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கிறது.
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருப்பதோடு, பிரமாண்டமாகவும் இருக்கிறது.
எல்.ஜி.ரவிசந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அவருடன் இணைந்து தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் ரசிகர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பது படம் முழுவதுமே தெரிகிறது.
சஸ்பென்ஸ் திரில்லர் ஆக்ஷன் ஜானர் திரைப்படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இயக்கியிருக்கும் இயக்குநர்கள் எல்.ஜி.ரவிசந்தர் மற்றும் எஸ்.பி.ஆர், மசாலத்தனம் மிக்க திரைக்கதையை எந்தவித நெருடலும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த ‘வா வரலாம் வா’ நிச்சயம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்கும்.